சீன அதிபருக்கு பதில் வட கொரிய அதிபரின் உருவபொம்மையை எரித்த பா.ஜ.க-வினர்

லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த 15 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் வரை உயிரிழப்பு\காயமடைந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த மோதலால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் சூழ்நிலை நிலவி வருகிறது. போரை எதிர்கொள்ளும் அளவிற்கு படைகள் தயார்படுத்தப்பட்டன.

அதேசமயம் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், லடாக்கில் இந்திய படையினர் வீரமரணமடைந்ததையடுத்து நாடு முழுவதும் சீனாவுக்கு எதிராக கண்டனக்குரல்கள் எழுந்தன.

பல்வேறு பகுதிகளில் சீன பொருட்களை சாலையில் போட்டு உடைத்தும், சீன அதிபரின் புகைப்படங்களை தீயிட்டு கொளுத்தியும் மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தை சேர்ந்த பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் சிலர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பதிலாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவை சேர்ந்த ஒரு நபர் கூறுகையில்,’சீன பொருட்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். சீன பிரதம மந்திரி கிம் ஜாங் உன்னின் உருவ பொம்மையை எரித்து எங்கள் எதிர்ப்பை தொடர்ந்து வெளிப்படுத்துவோம்’ என்றார். அந்த நபர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஜி ஜின்பிங்கிற்கு பதிலாக மேற்குவங்காள பாஜகவினர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்த சம்பவமும் அது தொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவும் நாடு முழுவதும் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools