சீனா, பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைக்கு கண்காணிப்பு செயற்கைக்கோள் அமைக்க, இந்திய ராணுவம் திட்ட மிட்டுள்ளது.
ரூ.4,000 கோடியில் செயல்படுத்தப்பட இருக்கும் இந்த திட்டத்திற்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய கடற்படை மற்றும் விமானப்படைகள் ஏற்கனவே சொந்தமாக
கண்காணிப்பு செயற்கைக்கோள்களை அமைத்துள்ளன.
தற்போது இந்திய ராணுவமும் இந்த திறனை அடைவதற்காக இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஜிசாட் 7பி செயற்கைக்கோள் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து மேற் கொள்ளப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சக
தகவல்கள் தெரிவித்துள்ளன.
நேற்று நடைபெற்ற பாதுகாப்புத்துறைக்கான கவுன்சில் கூட்டத்தில், இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020 ஆண்டு முதல் சீனாவுடனான உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) வழியாக ட்ரோன்கள் உள்ளிட்ட ஊடுருவல்களை கண்காணிக்கும் பணியை வலுப்படுத்துவதுடன் திறன்களை
மேம்படுத்துவதிலும் இந்திய ராணுவம் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.