2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில் வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பல நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
குறிப்பாக, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசி, அமெரிக்காவின் பைசர் மற்றும் மாடர்னா நிறுவன தடுப்பூசிகள் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் நல்ல பயன் தருகிறது. இந்த தடுப்பூசிகளின் செயல்திறன் 90 சதவிகிதத்திற்கும் மேல் உள்ளது.
இதற்கிடையில், சீனாவும் கொரோனா தடுப்பூசி உருவாக்கியுள்ளது. அந்நாட்டின் சினோவக் பயொடெக் நிறுவனம் சினோவக் என்ற பெயரில் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.
இந்த தடுப்பூசி 90 சதவிகிதம் செயல்திறன் கொண்டது என சீன நிறுவனம் தெரிவித்தது. இதையடுத்து, சீனாவின் சினோவக் நிறுவன கொரோனா தடுப்பூசியை பிரேசில் நாடு வாங்கியது.
இதையடுத்து, இந்த சினோவக் தடுப்பூசியை தன்னார்வலர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் நடைமுறைகள் பிரேசில் நடைபெற்றது. சமீபத்தில் நடைபெற்ற பரிசோதனையின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
அந்த பரிசோதனை முடிவுகளின் படி சீனாவின் சினோவக் தடுப்பூசி 50.4 சதவிகிதம் செயல்திறன் கொண்டது என தெரியவந்துள்ளது. மாடர்னா, பைசர், ஆக்ஸ்போர்டு தடுப்பூசிகளை ஒப்பிடும் போது சீனாவின் தடுப்பூசி மிகவும் குறைவான செயல்திறன் கொண்டதாக உள்ளது.
சீனாவின் சினோவக் அங்கீகரிக்கக்கூடிய செயல்திறனை கூட இல்லாமல் இருப்பது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறைவான செயல்திறன் காரணமாக சீன தடுப்பூசியால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.