சீனாவுடனான வர்த்தகம் எப்போது தொடங்கும்? – டொனால்ட் டிரம்ப் பதில்

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே சுமார் 2 ஆண்டுகளாக வர்த்தக போர் நடந்து வந்தது. இந்த வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

இதையொட்டி இரு தரப்பு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதன் பலனாக கடந்த மாதம் 14-ந் தேதி இரு நாடுகள் இடையே முதல் கட்ட ஒப்பந்தம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து சீன இறக்குமதி பொருட்கள் மீதான கூடுதல் வரியை அமெரிக்கா ரத்து செய்தது. அதேபோல் சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீதான கூடுதல் வரிவிதிப்பை நிறுத்தி வைத்தது.

இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான முதற்கட்ட ஒப்பந்தம் வருகிற 15-ந்தேதி கையெழுத்தாகும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். தலைநகர் வாஷிங்டனில் சீனாவின் உயர்மட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அவர் கூறினார். இந்த முதற்கட்ட ஒப்பந்தம், இரு பொருளாதார சக்திகளுக்கும் இடையிலான பதற்றத்தை குறைக்கும் என்று தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் முதற்கட்ட ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு தான் சீனாவுக்கு சென்று 2-ம் கட்ட ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கப்போவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools