சீனாவுக்கு ஒரு லட்சம் குரங்குகள் ஏற்றுமதி – இலங்கை அரசு பரிசீலனை செய்கிறது

டாக் மகாக் வகையைச் சேர்ந்த குரங்குகள் இலங்கையில் வசிக்கின்றன. இவை ஆபத்தின் விளிம்பில் உள்ளதாக சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பின் சிவப்பு பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையிடம் இருந்து ஒரு லட்சம் குரங்குகளைக் கொள்முதல் செய்ய விரும்புவதாக சீனா தெரிவித்து உள்ளது.

சீனாவின் இந்த கோரிக்கை குறித்து பரிசீலிக்குமாறு இலங்கை வேளாண்துறை அமைச்சர் மகிந்தா அமரவீரா தன் நாட்டு உயர் அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார். சீன உயிரியல் பூங்காக்களில் விடுவதற்காக குரங்குகள் தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “சீனாவில் உள்ள 1,000 உயிரியல் பூங்காக்களில் விடுவதற்காக ஒரு லட்சம் குரங்குகளை அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

எனினும் இது தொடர்பான நிதி சார்ந்த அம்சங்கள் ஏதும் தெரியவில்லை. சீனாவுக்கு குரங்குகளை அனுப்பி வைப்பது தொடர்பாக கடந்த 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சிறப்பு விவாதம் நடைபெற்றது. இலங்கையில் குரங்குகளின் எண்ணிக்கை 30 லட்சத்தை எட்டியுள்ளதாகவும் குரங்குகள் உள்ளூரில் சாகுபடி செய்யப்படும் பயிர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பான சட்ட நடைமுறைகள் குறித்து ஒரு குழுவை அமைப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து சில வகை விலங்கினங்களை சீனா கடந்த ஆண்டு நீக்கியது. அவற்றில் அந்நாட்டின் 3 குரங்கு இனங்கள், மயில்கள் உள்ளிட்டவை அடங்கும்.

இதன்மூலம் அவற்றை விவசாயிகள் கொல்வதற்கு இருந்த தடை நீங்கியுள்ளது. இலங்கைக்கு மிகப்பெரிய அளவில் கடன் கொடுக்கும் நாடுகளில் சீனாவும் ஒன்று என்பதை மனதில் கொண்டு குரங்கள் தொடர்பான அந்நாட்டின் கோரிக்கையை இலங்கை பரிசீலிக்கும் என்று தெரிகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools