X

சீனாவுக்கு எதிரான பொருளாதார போருக்கு முற்றுப்பு வைத்தது அமெரிக்கா!

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே சுமார் 2 ஆண்டுகளாக வர்த்தக போர் நடந்து வந்தது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சீனா நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைப் பின்பற்றி வருவதாகவும், அமெரிக் காவின் அறிவுசார் சொத்துக்களையும், தொழில் நுட்பங்களையும் திருடி வருவதாகவும் குற்றம்சாட்டி, இரு தரப்பு வர்த்தக போரை தொடங்கினார். அவர் அமெரிக்காவில் சீன பொருட்களுக்கு கூடுதல் வரிகளை விதித்தார்.

ஆனால் சீன அதிபர் ஜின்பிங், டிரம்பின் குற்றச்சாட்டை நிராகரித்தார்.

அது மட்டுமின்றி அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கிற வகையில், சீனாவில் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்தார். இரு நாடுகளும் மாறி மாறி வரிகளை உயர்த்தி வந்தன.

இந்த வர்த்தக போர், உலகளாவிய பொருளாதார மந்த நிலைக்கு ஒரு காரணமாகவும் கூறப்பட்டது.

இருப்பினும் இந்த வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இதையொட்டி இரு தரப்பு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் முதல் கட்ட ஒப்பந்தம் இரு நாடுகள் இடையே ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று (15-ந் தேதி) அமலுக்கு வரவிருந்த சீன பொருட்கள் மீதான 15 சதவீத அமெரிக்க வரி விதிப்பு ரத்தாகி உள்ளது.

இரண்டாம் கட்ட ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பான பேச்சு வார்த்தையை, அடுத்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிகிற வகையில் காத்திருக்காமல் உடனடியாக தொடங்குவோம் என டிரம்ப் அறிவித்துள்ளார்.

தற்போது முதல் கட்ட ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருப்பதற்கு அமெரிக்க விவசாயிகளும், சில்லரை வியாபாரிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இப்போது சீன பொருட்கள் மீதான 15 சதவீத வரி விதிப்பு ரத்து ஆகாமல் இருந்திருந்தால், கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் அமெரிக்க மக்கள் சீன ஆடைகள், ஸ்மார்ட் போன்கள், பொம்மைகள் போன்றவற்றை கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டி இருந்திருக்கும்.

அமெரிக்காவின் நடவடிக்கையில் திருப்தி அடைந்துள்ள சீனா, அமெரிக்காவில் இருந்து கூடுதல் அளவு சோயாபீன், பால் பொருட்கள், பிற விவசாய பொருட்களை வாங்க முன்வந்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க பண்ணை பணியக கூட்டமைப்பின் தலைவர் ஜிப்பி டுவால் கூறும்போது, “இரு தரப்பு மோதல் ஏற்படுவதற்கு முன்பாக சீனாதான் அமெரிக்காவின் இரண்டாவது பெரிய விவசாய சந்தையாக இருந்தது. இப்போது 5-வது இடத்துக்கு சரிந்து விட்டது. இப்போது மீண்டும் சீன வர்த்தகத்துக்கான கதவை திறந்திருப்பதால் பழைய நிலைக்கு திரும்ப வழி வகுத்துள்ளது” என குறிப்பிட்டார்.