சீனாவில் நிலநடுக்கம் – பலியானவர்கள் எண்ணிக்கை 65 ஆக உயர்வு
சீனாவின் தென்மேற்கே அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தில் கன்ஜி திபெத்திய சுயாட்சி பகுதியில் உள்ள லூடிங் கவுன்டி பகுதியில் நேற்று மதியம் 12.52 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.8-ஆக பதிவான நிலநடுக்கத்தால் பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளன.
நிலச்சரிவு ஏற்பட்டதில் பெரிய கற்கள் உருண்டு விழுந்து நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்திற்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர் என முதல் கட்ட தகவல்கள் வெளியாகின.
பிறகு, சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்ததாக மீட்புக்குழு தெரிவித்தது. இந்நிலையில், கார்ஸ் திபெட்டன் நகரத்தில் உள்ள மாக்ஸி என்ற வரலாற்று சிறப்புமிக்க பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி மேலும் 37 பேர் பலியாகியுள்ளனர். 50 ஆயிரம் பேர் வீடுகளைவிட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
சுமார் 150 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இதேபோல் ஷிமியான் என்கிற மாகாணத்தில் 28 பேர் பலியாகியுள்ளனர். 248 பேர் படுகாயங்களுடன் மீட்ட நிலையில், காணாமல் போன 12 பேரை மீப்பு குழுவினர் தேடி வருகின்றனர். சீனாவில் பல்வேறு மாகாணங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.