அமீர்கான், அமிதாப்பச்சன் ஆகிய இருவரும் நடித்துள்ள ‘தக்ஸ் ஆப் இந்துஸ்தான்’ இந்தி படம் கடந்த மாதம் இந்தியா முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியானது. அதிக பொருட்செலவில் எடுத்த இந்த படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் படம் தோல்வி அடைந்தது.
தோல்விக்கு பொறுப்பு ஏற்று அமீர்கான் மன்னிப்பு கேட்டார். இந்த படத்தில் ரசிகர்களை திருப்திபடுத்த முடியாமல் போனதற்காக வருந்துகிறேன் என்றார். தக்ஸ் ஆப் இந்துஸ்தான் படம் அடுத்த வாரம் சீனாவில் வெளியாகிறது. படத்தை விளம்பரப்படுத்தும் வேலைகள் அங்கு தொடங்கி உள்ளன. இதற்காக அமீர்கான் சீனா சென்றார். சீனாவின் குவாங்சோவில் உள்ள குவாங்டாங் பல்கலைக்கழகத்தில் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்து இருந்தனர். இதில் பங்கேற்பதற்காக அமீர்கானும் ஓட்டலில் இருந்து புறப்பட தயாரானார். ஆனால் கடைசி நேரத்தில் விழா நடத்த பல்கலைக்கழகம் தடை விதித்தது.
இதுகுறித்து பல்கலைக்கழகம் தரப்பில் கூறும்போது, “படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி என்று எங்களுக்கு தெரியவில்லை. முறையான அனுமதி பெறாததால் விழாவுக்கு தடை விதித்தோம்” என்றனர். இதனால் நிகழ்ச்சியை நட்சத்திர ஓட்டலுக்கு மாற்றினர். அங்கு அமீர்கான் கலந்துகொண்டார்.