சீனாவில் தயாரிக்கும் அரிய வகை மருந்திற்காக அழிக்கப்படும் ஆப்பிரிக்க கழுதைகள்

சீனாவில், கழுதை தோலில் உள்ள ஜெலட்டின் மூலப்பொருளால் தயாரிக்கப்படும் ஒரு அரிய வகை பண்டைய மருந்திற்கான தேவை அதிகரித்துள்ளதால் ஆப்பிரிக்காவின் பல நாடுகளில் கழுதைகள் களவாடப்படுவது அதிகரித்துள்ளது. உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், இளமையை நீட்டிக்கவும், தூக்கமின்மையை போக்கவும், குழந்தை பாக்கியத்தை அதிகரிக்கவும் உதவும் “எஜியாவோ” (Ejiao) எனும் மருந்திற்காக, கழுதைகளின் தோல்களை வேக வைத்து, அதில் பல பொருட்களை சேர்த்து பொடியாகவும், மாத்திரையாகவும், மருந்தாகவும் சீனாவில் விற்கப்படுகிறது.

இந்திய கிராமங்களில் கோழி, ஆடு, மாடு, எருமை வளர்ப்பில் பலர் ஈடுபடுவது தொன்று தொட்டு நடைபெறுகிறது. அதே போல் பல ஆப்பிரிக்க நாடுகளில் குடிநீர், உணவு, பெரும் சுமை தூக்குவது உள்ளிட்ட பல வேலைகளுக்கு கழுதைகள் பயன்படுத்தப்படுகின்றன.

உலகின் 53 மில்லியன் கழுதைகளில் 3ல் 2 பங்கு ஆப்பிரிக்க நாடுகளில் உள்ளன. கழுதை தோலுக்கு அதிக விலை கிடைப்பதால், அவற்றை பலர் களவாடுவது அதிகரித்துள்ளது. திருடு போகும் கழுதைகளின் எலும்புக்கூடுகள் ஆங்காங்கே கண்டறியப்படுவதாக கழுதைகளின் உரிமையாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

1990களில் சீனாவில் 11 மில்லியனாக இருந்த கழுதைகளின் எண்ணிக்கை 2021 காலகட்டத்தில் 2 மில்லியனுக்கும் கீழே குறைந்து விட்டது. இதையடுத்து, சீன நிறுவனங்கள், தங்கள் தோல் தேவைக்கு ஆப்பிரிக்க நாடுகளை சார்ந்துள்ளன. தற்போது வரை எஜியாவோ உற்பத்திக்கு எத்தனை கழுதைகள் களவாடப்பட்டன எனும் சரியான புள்ளிவிவரம் வெளியிடப்படவில்லை.

2013ல் $3.2 பில்லியனாக இருந்த எஜியாவோவிற்கான சந்தை மதிப்பு, 2020ல் $7.8 பில்லியனாக உயர்ந்துள்ளது. இது மேலும் உயர்ந்தால், கழுதை இனத்திற்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால், கழுதை தோல் ஏற்றுமதிக்கு முழுமையான தடை விதிக்க வேண்டும் என ஆப்பிரிக்க நாடுகளில் விலங்கின ஆர்வலர்கள் குரல் கொடுக்க துவங்கியுள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news