கிழக்கு சீனாவில் உள்ள ஜியாங்சு மாகாணத்துக்குட்பட்ட யான்செங் நகரில் மிகப்பெரிய தொழிற்பேட்டை ஒன்று அமைந்துள்ளது. இங்கு பயிர்களுக்கான பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் ரசாயன உரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று பிற்பகல் வெடி விபத்து ஏற்பட்டு தீப்பிடித்தது. தொழிற்சாலையில் இருந்து வேகமாக பரவிய தீயால் அருகாமையில் உள்ள தொழிற்சாலைகளும் பலத்த சேதமடைந்தன.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தொழிற்சாலைகளுக்குள் சிக்கித் தவித்த பலரை மீட்டனர். கடுமையாக போராடி இன்று அதிகாலையில் தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மிகவும் தீவிரமான தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட பலர் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
அதன்பின்னர் பலத்த தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள், சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் இன்று காலை நிலவரப்படி உயிரிழப்பு 44 ஆக உயர்ந்தது. சுமார் 90 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொழிற்சாலையில் ஏற்பட்ட இந்த பெரும் வெடிவிபத்தால், அப்பகுதியில் 2.2 ரிக்டர் அளவுக்கு சமமான ஒரு நில அதிர்வு இருந்ததாக சீனாவின் பூகம்ப ஆய்வு மையம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.