தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதி என்று சீன சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது. சமீபத்தில் தைவானை சுற்றி கடலில் சீனா போர் பயிற்சிகளை மேற்கொண்டது. அதேபோல் தைவானுடன் அமெரிக்கா இணைந்து பயிற்சிகளை மேற்கொள்கிறது.
இதற்கிடையே தைவான் துணை அதிபர் வில்லி யம்லாய், பராகுவே நாட்டின் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அங்கு புறப்பட்டு சென்றார். வழியில் அவர் அமெரிக்காவில் நியூயார்க் நகருக்கு சென்றார். அவரது அமெரிக்க பயணத்துக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில் சீனாவின் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் என்று தைவான் துணை அதிபர் வில்லி யம்லாய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
தைவானின் நீண்ட கால உயிர் வாழ்வை சர்வதேச சமூகம் அக்கறை கொள்ள வேண்டிய ஒன்றாகும். தைவானுக்கு சர்வாதிகாரத்தின் அச்சுறுத்தல் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் நாங்கள் முற்றிலும் அடிபணிய மாட்டோம். பயப்படமாட்டோம்.
ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தின் மதிப்புகளை நிலைநிறுத்துவோம்” என்றார். மேலும் தைவான் அதிபர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தைவான் பாதுகாப்பாக இருக்கும் போது உலகம் பாதுகாப்பாக இருக்கும். தைவான் ஜலசந்தியில் அமைதி நிலவும் போது, உலக அமைதி நிலவும் என்று தெரிவித்து உள்ளது.