‘சீதா ராமம்’ அனைவரும் பார்க்க வேண்டிய படம் – முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பாராட்டு
இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்த படம் ‘சீதா ராமம்’. இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார். மேலும், ராஷ்மிகா மந்தனா, சுமந்த் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் உருவான இப்படம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, “சீதா ராமம்” படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ” நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பத் துறைகளின் ஒருங்கிணைப்பில், ஒரு அழகான காட்சி உருவாகியுள்ளது. எளிமையான காதல் கதையைப்போல் இல்லாமல் , வீரமிக்க சிப்பாய் பின்னணியுடன், பலவிதமான உணர்வுகளை வெளிக்கொணரும் இந்தப் படம், அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மற்றொரு பதிவில், “நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல படத்தைப் பார்த்த உணர்வைத் தந்தது சீதா ராமம். போர் ஓசையின்றி கண்களுக்கு இதமான இயற்கையின் அழகை வெளிப்படுத்தியதற்கு இயக்குனர் ஹனு ராகவபுடி, தயாரிப்பாளர் அஷ்வினி தத், ஸ்வப்னா மூவி மேக்கர்ஸ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என்று தெலுங்கில் குறிப்பிட்டுள்ளார்.