சி.எஸ்.கே அணியுடனான சுரேஷ் ரெய்னாவின் பந்தம் முறிந்தது
13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் வருகிற 19-ந் தேதி முதல் நவம்பர் 10-ந் தேதி வரை நடக்கிறது. இதற்காக 8 அணிகளை சேர்ந்த இந்திய வீரர்களும் அங்கு சென்று தங்களை தயார்படுத்தி வருகிறார்கள். வெளிநாட்டு வீரர்களும் அணியினருடன் இணைந்த வண்ணம் உள்ளனர்.
3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டோனி தலைமையில் கடந்த 21-ந் தேதி அமீரகம் சென்றடைந்தது. தங்களது 6 நாள் தனிமைப்படுத்துதலை முடித்து பயிற்சியை தொடங்க இருந்த நிலையில் சென்னை அணியை சேர்ந்த 2 வீரர்கள் (தீபக் சாஹர், ருதுராஜ் கெய்க்வாட்) உள்பட 13 பேர் கொரோனாவால் பாதிக் கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகின. கொரோனாவால் பாதிக்கப்பட்ட வீரர்கள், உதவியாளர்கள், வலைப்பயிற்சி பவுலர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் சென்னை அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக அந்த அணியின் துணை கேப்டனும், எல்லா சீசனிலும் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தவரும், ஐ.பி.எல். போட்டியில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் விராட்கோலிக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் இருப்பவருமான 33 வயது சுரேஷ் ரெய்னா கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐ.பி.எல். போட்டியில் இருந்து திடீரென விலகி நாடு திரும்பினார். தனிப்பட்ட காரணத்தினால் சுரேஷ் ரெய்னா போட்டியில் இருந்து ஒதுங்கியதாகவும், இந்த சீசனில் அவர் விளையாடமாட்டார் என்று அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த மாதம் 20-ந் தேதி பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் வீடு புகுந்து கொள்ளையர்கள் தாக்கியதில் சுரேஷ் ரெய்னாவின் மாமா அசோக் குமார் இறந்து விட்டார். அவரது குடும்பத்தினர் 4 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த துயர சம்பவத்தால் சுரேஷ் ரெய்னா ஐ.பி.எல். போட்டியில் இருந்து ஒதுங்கியதாக முதலில் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் இருந்து சுரேஷ் ரெய்னா முழுமையாக விலக காரணம் என்ன? என்பது குறித்து புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. ஓட்டலில் கேப்டன் டோனிக்கு ஒதுக்கப்பட்டது போல் தனக்கு பால்கனி வசதியுடன் கூடிய தங்கும் அறை கொடுக்கப்படவில்லை என்று அதிருப்தி அடைந்து அணி நிர்வாகத்திடம் கேள்வி கேட்டதால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டாலும், கொரோனா பாதிப்பு அச்சம் மற்றும் மருத்துவ உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதில் உள்ள நெருக்கடி ஒத்துவராததாலும் அவர் விலகல் முடிவை எடுத்ததாக தெரிகிறது. இந்த எதிர்பாராத விலகலால் சென்னை அணியுடனான சுரேஷ் ரெய்னாவின் நீண்ட கால பந்தம் முடிவுக்கு வரலாம் என்று கூறப்படுகிறது.
சுரேஷ் ரெய்னாவின் விலகல் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவரான என்.சீனிவாசன் அளித்த ஒரு பேட்டியில், ‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்பொழுதும் ஒரு குடும்பம் போன்றதாகும். எல்லா சீனியர் வீரர்களும் அதனுடன் இணைந்து வாழ பழகிவிட்டார்கள். உங்களுக்கு தயக்கமோ, அதிருப்தியோ இருந்தால் நீங்கள் விலகி செல்லலாம். யாரையும், எதையும் செய்யச்சொல்லி நான் கட்டாயப்படுத்தமாட்டேன். சில நேரங்களில் வெற்றி தலைக்கேறிவிடும். நான் டோனியிடம் பேசினேன். கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் பிரச்சினை எதுவுமில்லை என்று உறுதி அளித்தார். ‘ஜூம்’ செயலி மூலம் டோனி வீரர்களுடன் பேசி பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தி இருக்கிறார். யாரால் தொற்று பரவியது என்பது தெரியவில்லை.
ரெய்னா விலகல் அணியில் தாக்கத்தை ஏற்படுத்தாது. உறுதியான மனநிலை கொண்ட கேப்டன் என்னிடம் உள்ளார். டோனி எந்த பிரச்சினையானாலும் எளிதில் குழப்பம் அடையமாட்டார். இது அணியில் உள்ள எல்லோருக்கும் நிறைய நம்பிக்கையை அளிக்கிறது. ருதுராஜ் அருமையான பேட்ஸ்மேன். இந்த முறை அவருக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்த போட்டியின் நட்சத்திரமாகவும் அவர் மாறலாம், யாருக்கு தெரியும். ஐ.பி.எல். போட்டி இன்னும் தொடங்கவில்லை. தான் என்ன தவற விடுகிறோம் என்பதை ரெய்னா நிச்சயம் உணர்வார். அதேபோல் அவர் பணத்தையும் (இந்த சீசனுக்கான ரூ.11 கோடி சம்பளம்) இழக்க போகிறார்’ என்று தெரிவித்தார்.