X

சிவராத்திரியை முன்னிட்டு கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுட்ட மூதாட்டி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி தெருவில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு மாசி மாதம் நடைபெறும் சிவராத்திரி திருவிழா அன்று நள்ளிரவில் வெறும் கையினால் கொதிக்கும் நெய்யில் அப்பம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வு கடந்த 101 வருடங்களுக்கு மேலாக நடப்பதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு சிவராத்தியை முன்னிட்டு அதே பகுதியை சேர்ந்த முத்தம்மாள் என்ற 92 வயது மூதாட்டி மற்றும் கோவில் பூசாரிகள் நேற்று இரவு கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பத்தை சுட்டனர். இதை காண்பதற்காக சுற்று வட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கோவிலில் திரண்டனர்.

கொதிக்கும் நெய்யில் அப்பம் சுடுவதை பக்தர்கள் ஆச்சரியம் கலந்த வியப்புடன் பார்த்தனர். 7 ஊர்களுக்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் 7 கூடைகளில் அப்பம் சுட்டு பின்பு பக்தர்களுக்கு வழங்குவார்கள். முன்னதாக பாசிப் பயிறு, தட்டாம் பயிறு, கருப்பட்டி ஆகியவைகளை உரலில் போட்டு இடித்து அப்பத்திற்கு தேவையான இனிப்பு உருண்டை செய்யப்படும். இந்த உருண்டை இடிப்பதற்கு பெண்கள் நேர்த்தி கடன் மேற்கொண்டு பயபக்தியுடன் தயார் செய்து கொடுப்பர்.

மகா சிவராத்தரி அன்று நடைபெறும் இந்த பூஜையில் விரதம் இருந்து கலந்து கொண்டு அப்பத்தை வாங்கி உண்டால் உடலில் இருக்கின்ற எல்லா நோய்களும் சரியாகிவிடும் என்றும், எவ்வித நோயும் வராது என்பதும், குழந்தை இல்லாத தம்பதியினர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மூதாட்டியிடம் ஆசி பெற்று அப்பம் வாங்கி உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

இதற்கான நேற்று இரவு நடந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் அப்பத்தை பிரசாதமாக வாங்கி சென்றனர். கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுடும் மூதாட்டி முத்தம்மாள் கடந்த 61 வருடங்களாக சிவராத்தியன்று விரதம் இருந்து இதனை செய்து வருகிறார்.