சிவப்பு பட்டியலில் அல்லாத நாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு புதிய சலுகை அறிவித்த இங்கிலாந்து

வெளிநாடுகளில் இருந்து தங்கள் நாட்டிற்கு வருபவர்களுக்கான பயணக் கட்டுப்பாடுகளை இங்கிலாந்து அரசு கடந்த மாதம் தளர்த்தியது. ஆனால், இந்தியாவில் இருந்து இங்கிலாந்து வருபவர்களுக்கான கட்டுப்பாடுகள் மட்டும் தொடர்ந்து வந்தது. கோவிஷீல்டு தடுப்பூசி விவகாரத்திலும் இருநாடுகளுக்கு இடையே கருத்துவேறுபாடு நிலவி வந்தது.

இங்கிலாந்து செல்லும் இந்தியர்கள் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக்கொண்டபோதும் 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்பட வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அரசு இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. இதையடுத்து, கடந்த 11ம் தேதி இங்கிலாந்து அரசு இந்திய பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அறிவித்தது. 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்ட இந்திய பயணிகள் 10 நாட்கள் கட்டாய தனிமையில் இருக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தது.  இதைத் தொடர்ந்து இந்திய அரசும் இங்கிலாந்து பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியது.

இந்நிலையில், சிவப்பு பட்டியல் அல்லாத நாட்டு பயணிகளுக்கு இங்கிலாந்து அரசு புதிய சலுகை அளித்துள்ளது.

அதன்படி, சிவப்பு பட்டியல் அல்லாத நாடுகளிலிருந்து வரும் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பயணிகள் பிசிஆர் டெஸ்டுக்குப் பதிலாக எல்.எப்.டி. (பக்கவாட்டு ஓட்டப் பரிசோதனை) சோதனையை எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

பி.சி.ஆர். சோதனைகளை விட எல்.எப்.டி. சோதனை மலிவானவை மற்றும் விரைவானவை. சோதனையின் முடிவு நெகடிவ் என்றால் பயணிகள் அதை உடனே புகைப்படம் எடுத்து அனுப்பலாம் எனவும் தெரிவித்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools