X

சிவசேனாவின் ஆட்சியை வீழ்த்தியது எப்படி? – ரகசியத்தை உடைத்த ஏக்நாத் ஷிண்டே

சிவசேனாவுக்கு எதிராக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியதால் அந்த கட்சியில் பிளவு ஏற்பட்டது. இதனால் நடந்த அரசியல் திருப்பங்களுக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என பா.ஜனதா மழுப்பலாக பதில் கூறி வந்தது. தேவேந்திர பட்னாவிசும், ஏக்நாத் ஷிண்டேயும் குஜராத்தில் சந்தித்து பேசியதாக தகவல்களும் பரவின.

இந்த நிலையில் நேற்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற கையோடு திறந்த புத்தகம் போல, திரைக்கு பின்னால் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே படம் போட்டு காட்டினார்.

இதுபற்றி ஏக்நாத் ஷிண்டே நேற்று சட்டசபையில் பேசியதாவது:-

20-ந் தேதி எம்.எல்.சி. தேர்தலில் கட்சியால் எனக்கு கிடைத்த அவமரியாதை என்னை கட்சிக்கு எதிராக தூண்டியது. இனி கட்சி பக்கம் திரும்ப கூடாது என்று தீர்மானித்தேன். எம்.எல்.ஏ.க்களுடன் போலீஸ் சோதனை சாவடிகளை தாண்டி எப்படி செல்வது என்பது எனக்கு தெரியும். செல்போன் டவர்களைக் கண்டறிவது மற்றும் ஒரு நபரை கண்காணிப்பது எப்படி என்று எனக்குத் தெரியும். எல்லாவற்றிற்கும் மேலாக மிகப்பெரிய கலைஞர் இவர் தான் (இவ்வாறு கூறியபடி தனது வலது பக்கம் அமர்ந்திருந்த பட்னாவிசை சுட்டிக்காட்டினார்).

கவுகாத்தி ஓட்டலில் எனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அயர்ந்து தூங்கிய பிறகு நான் குஜராத் செல்வேன். அங்கு பட்னாவிசை சந்தித்து பேசுவேன். எம்.எல்.ஏ.க்கள் எழுந்திருக்கும் முன்பே அதிகாலையில் கவுகாத்தி ஓட்டலுக்கு திரும்பி விடுவேன். எல்லாவற்றையும் ஒருங்கிணைத்தவர் இங்கே இருக்கிறார். இவர் என்ன செய்வார், எப்படி செய்வார் என்று யாருக்கும் தெரியாது. இவ்வாறு ஏக்நாத் ஷிண்டே பேசினார்.

இந்த ரகசியங்களை ஏக்நாத் ஷண்டே போட்டுடைத்தபோது பட்னாவிஸ் தர்மசங்கடமான நிலையில் இருந்ததை காண முடிந்தது. மேலும் ஏக்நாத் ஷிண்டே பேசும்போது, “எங்கள் எண்ணிக்கை பா.ஜனதாவை விட குறைவாக இருந்தது. ஆனாலும் பதவி ஏற்கும் முன் பிரதமர் நரேந்திர மோடி எங்களுக்கு வாழ்த்து கூறினார்.

மேலும் தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வதாக என்னிடம் தெரிவித்தார். மத்திய மந்திரி அமித்ஷா எங்களுக்கு பின்னால் ஒரு பாறையை போல நின்று ஆதரவளிப்பதாக கூறினார்” என்றார்.