விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்று பகுதியில் 1070 பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பட்டாசு உற்பத்தியில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக்கூடாது, சரவெடி தயாரிக்க கூடாது என நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி இப்பகுதி ஆலைகளில் பட்டாசு தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த உத்தரவு காரணமாக பட்டாசு உற்பத்தி குறைந்து விட்டது. கடந்த ஆண்டை விட 40 சதவீதம் பட்டாசுகள் உற்பத்தி குறைந்துள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டதால் தற்போது பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் சிவகாசி பட்டாசு ஆலைகளுக்கு வெளி மாநில பட்டாசு வியாபாரிகள் வருகை தொடங்கியுள்ளது. அவர்கள் 2 மாதங்களுக்கு முன்னரே ஆர்டர் கொடுத்திருந்த நிலையில் இங்கிருந்து பட்டாசுகள் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் தமிழகம், வெளிமாநில வியாபாரிகளும் சிவகாசிக்கு நேரடியாக வந்தும் பட்டாசு ஆர்டர் கொடுக்கின்றனர். ரூ.5 லட்சம், அதற்கு மேல் ஆர்டர் கொடுப்பவர்கள் பட்டாசு ஆலைகளுக்கு நேரடியாக வருகின்றனர். அதற்கு கீழ் ஆர்டர் கொடுப்பவர்கள், சில்லறை வியாபாரிகள், மொத்த பட்டாசு விற்பனை கடைகளுக்கு சென்று வருகின்றனர். இங்கு ஆலையின் விலைக்கே பட்டாசு கிடைக்கும் என்பதால் ஒரு சிலர் தங்கள் சொந்த தேவைகளுக்கு முன்னதாகவே சிவகாசிக்கு வந்து பட்டாசுகளை வாங்கி செல்கின்றனர்.
இதுபற்றி தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் இளங்கோவன் கூறும்போது, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி குறைந்து விட்டது. பல்வேறு காரணங்களால் இந்த ஆண்டு 40 சதவீதம் அளவில் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. சிவகாசியில் பட்டாசு உற்பத்தி சதவீதம் குறைந்து விட்டதால் இந்த ஆண்டு பட்டாசு கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ. 1000 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் பட்டாசு ஆலை உற்பத்தியாளர்கள் தங்களுக்கு வருமான இழப்பு ஏற்படும் என்று கவலை அடைந்துள்ளனர் என்றார்.