X

சிலந்தி ஆற்றின் குறுக்கே அனை கட்டுவதை எதிர்த்து 26 ஆம் தேதி முற்றுகை போராட்டம்

சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 26-ந்தேதி உடுமலை சின்னாறு சோதனைச்சாவடியில் முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக திருப்பூர் மாவட்ட விவசாயிகள் அறிவித்துள்ளனர். இது குறித்து திருப்பூரை சேர்ந்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் உயரம் 90 அடி. 4 டிஎம்சி., நீர் கொள்ளளவு கொண்டது. 1958-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அணை மூலமாக, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 65 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும், அமராவதி ஆற்றுப்படுகை மூலமாக 110 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பல லட்சம் மக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றது.

மாநிலம் மூணார் பகுதியிலுள்ள பாம்பாறு உள்ளது. இந்த ஆறு மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உருவாகி அமராவதி அணையை வந்தடையும். இந்த நிலையில், இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகா, வட்டவடா கிராம ஊராட்சி எல்லைக்குட்பட்ட, பெருகுடா எனும் இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தற்போது கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது. இது வன்மையாக கண்டி க்கத்தக்கது. இந்த அணை கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, அணையை நம்பி இருக்கும் பொது மக்களும், விவசாயிகளும் பாதிப்புக்கு ஆளாக நேரிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தடுப்பணையின் அருகிலேயே மிகப்பெரிய அளவிலான கார்ப்பரேட் நிறுவனத்தின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு ஆலை உள்ளது. அந்த ஆலையின் தேவைக்காக அமராவதிக்கு வரும் ஆற்றில் அணை கட்டப்பட்டு வருகிறது. இந்த தடுப்பணையை தாண்டி ஒரு சொட்டுநீர் கூட அமராவதி அணைக்கு வராது. கேரளாவின் இந்த சட்டவிரோத, தமிழ்நாட்டின் உரிமையை பாதிக்கின்ற தடுப்பணை திட்டம் செயல்படுத்துவதை கண்டித்து வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் வழியில் உள்ள சின்னாறு சோதனை சாவடியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் எல்லை முற்றுகை போராட்டம் நடைபெறவுள்ளது.

இந்த முற்றுகை போராட்டத்தில் அமராவதி ஆற்று பாசன விவசாயிகள், அனைத்து விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், உழவர் போராளிகள், பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.