Tamilசெய்திகள்

சிறையில் நிர்மலாதேவி தற்கொலை முயற்சி!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் பேராசிரியை நிர்மலாதேவி. அங்குள்ள தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கடந்த ஏப்ரல் மாதம் அவர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நிர்மலாதேவிக்கு உதவியதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி கைது செய்யப்பட்டனர்.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நிர்மலாதேவிக்கு இன்னமும் ஜாமீன் கிடைக்கவில்லை. ஆனால் கைதான முருகன், கருப்பசாமிக்கு ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதால் அவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் நிர்மலா தேவி கடந்த முறை ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டபோது நிருபர்களிடம் பேசினார். அப்போது போலீஸ் அதிகாரிகள் தன்னை மிரட்டுவதாகவும், உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து நிர்மலாதேவியை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று வேனில் ஏற்றினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று வழக்கு விசாரணைக்கு வந்த போது நிர்மலாதேவி ஆஜர்படுத்தப்படவில்லை. ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகியோர் கோர்ட்டில் ஆஜரானார்கள். இதையடுத்து இந்த வழக்கு வருகிற 20-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. மாலை 3 மணிக்கு காணொலி காட்சி மூலம் நிர்மலாதேவியை ஆஜர்படுத்தி வழக்கு ஒத்தி வைப்பு விவரம் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் கூறியதாவது:-

பேராசிரியை நிர்மலா தேவி ஆட்சியாளர்களால் மிரட்டப்பட்டு வருகிறார். போலீஸ் உயர் அதிகாரிகளும் தொடர்ந்து மிரட்டுகிறார்கள். கடந்த ஜனவரி 30-ந்தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வந்தபோது நிர்மலாதேவி சி.பி.சி.ஐ.டி. போலீசார் தன்னை மிரட்டியதாக பேட்டி அளித்தார்.

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி.யை சேர்ந்த உயர் அதிகாரிகள் நிர்மலா தேவியை தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள். கடந்த முறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு மதுரைக்கு வரும் வழியில் கிருஷ்ணன்கோவிலுக்கும், டி.கல்லுப்பட்டிக்கும் இடையே வேனை நிறுத்தி நிர்மலாதேவியை போலீசார் தாக்கி உள்ளனர். இதில் அவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நிர்மலா தேவி மதுரை சிறையில் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அதனை சிலர் தடுத்துள்ளனர். போலீஸ் தாக்கிய காயங்கள் தெரிந்துவிடும் என்பதால் நேற்றைய விசாரணைக்காக நிர்மலாதேவியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தவில்லை.

சிறையில் நிர்மலா தேவிக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு வருகிறது. அவரது உயிருக்கும் ஆபத்து உள்ளது. நிர்மலாதேவியை தனிமைப்படுத்தி வைத்திருக்கும் சிறை நிர்வாகம் அவருக்கு தேவையான மருத்துவ வசதி மற்றும் உணவு வசதி செய்து கொடுப்பதில்லை.

எப்படியாவது சிறைக்குள்ளேயே நிர்மலாதேவியை தீர்த்துக்கட்ட வேண்டும் என்பது போன்ற சதியை அதிகாரிகள் செய்து வருகிறார்கள். அதற்காக அனைத்து வகையான தொல்லைகளையும் நிர்மலாதேவிக்கு கொடுக்கிறார்கள்.

வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை மறைத்து விட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகையை தயாரித்துள்ளனர். இந்த கீழ்கோர்ட்டு விசாரணையையும் உயர்நீதிமன்றம் நிறுத்தி உத்தரவிட்டுள்ளது. 10 மாதங்கள் ஆகியும் ஜாமீன் கிடைக்காமல் நிர்மலாதேவி சிறையில் வாடி வருகிறார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. அதனை சட்டரீதியாக அவர் சந்தித்து இந்த வழக்கின் பின்னணிகளை விரைவில் வெட்டவெளிச்சத்திற்கு கொண்டு வருவார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *