Tamilசெய்திகள்

சிறையில் இருந்து தப்பிய 2 பெண் கைதிகள் – கேரளாவில் பரபரப்பு

திருவனந்தபுரம் அருகே அட்டகுளங்கரை பகுதியில் பெண்கள் ஜெயில் உள்ளது. இந்த ஜெயிலில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

திருட்டு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட வர்க்கலை பகுதியைச் சேர்ந்த சந்தியா, பாங்கோடு பகுதியைச் சேர்ந்த சில்பா ஆகிய 2 பெண்கள் விசாரணை கைதியாக இந்த ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தனர்.

நேற்று மாலை 5 மணிக்கு இந்த ஜெயிலில் உள்ள கைதிகளின் கணக்கெடுப்பு நடை பெற்றது. அப்போது சந்தியாவும், சில்பாவும் மாயமானது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயில் ஊழியர்கள் இதுபற்றி ஜெயில் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

சிறைத்துறை டி.ஜி.பி. கிருஷி ராஜ்சிங் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. அவர் ஜெயிலுக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினார்.

ஜெயிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகள் மூலமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது மாலை 4.30 மணிக்கு அந்த 2 பெண் கைதிகளும் குளியல் அறை பகுதிக்கு செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

அந்த பகுதியில்தான் ஜெயிலில் சேரும் குப்பை கூழங்களை சுவர் அருகே கொட்டி வைப்பார்கள். இதனால் அந்த பகுதி மேடாக காட்சி அளிக்கும். இதை பயன்படுத்தி அந்த பெண் கைதிகள் இருவரும் ஜெயில் சுவர் ஏறி குதித்து தப்பி சென்றது விசாரணையில் தெரிய வந்தது.

அந்த கைதிகள் தப்பி செல்வதற்கு ஜெயில் ஊழியர்கள் உதவி இருக்கலாம் என்ற சந்தேகமும் ஜெயில் அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அந்த கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

ஜெயலில் இருந்து பெண் கைதிகள் தப்பிச் சென்றது இதுதான் கேரளாவில் முதல் முறை ஆகும். கைதிகள் இருவரையும் கண்டுபிடித்து கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முக்கிய ரெயில் நிலையம், பஸ் நிலையங்களில் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *