சிறு படங்கள் ஓடினால் தான் தமிழ் சினிமாவிற்கு நல்லது – கவிஞர் வைரமுத்து பேச்சு
பிரபல எடிட்டர் பி.லெனின் கதை, திரைக்கதையில், இ.வி.கணேஷ்பாபு, இயக்கி நடித்துள்ள திரைப்படம் “கட்டில்”. மேப்பிள் லீப்ஸ் புரொடக்ஷன்ஸ் (Maple Leafs Productions) தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஶ்ரீகாந்த்தேவா இசையமைத்துள்ளார். வைட் ஆங்கிள் ரவிசங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவினில் தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
இந்த நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது, கட்டில் மாதிரியான சிறு படங்கள் ஓடினால் தான் தமிழ் சினிமாவிற்கு நல்லது. இது மாதிரி படங்களில் தான் புதிய கலைஞர்கள் நமக்கு கிடைப்பார்கள். பெரிய படங்கள் திட்டமிட்டுப் பார்க்க வைக்கப்படுகிறது, துப்பாக்கி சத்தங்களுக்கு மத்தியில் கணேஷ்பாபு புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருக்கிறார். சிறு படங்கள் தான் நம்மைச் சிறகடித்துப் பறக்கவைக்கும் நம் சிந்தனையை வளர்க்கும். பழைய படங்களின் போஸ்டர் பார்த்தால் அதில் எல்லாமே பெண்களும் முக்கியமாக இடம் பெற்றிருப்பார்கள்.
ஆனால், இப்போது சினிமாக்களில் பெண்களின் படங்களைப் பார்க்க முடிகிறதா? பெண்ணுக்கு சரிசமமான இடம் தந்த சினிமா தான் தமிழ் சினிமாவின் பொற்காலம், அந்த பொற்காலத்தை தன் கட்டில் மூலம் மீட்டுக்கொண்டு வந்திருக்கிறார் கணேஷ்பாபு . இது மாதிரியான சின்னப்படங்கள் ஜெயிப்பது தான் மக்களுக்கு மகிழ்வைத்தரும் என் போல் சமூக செயல்பாட்டாளர்கள் அதைத்தான் ஆசைப்படுகிறோம். கண்ணதாசன், வாலி இருந்தபோது அவர்களோடு போட்டி போட்டு அவர்களோடு நான் நின்றேன் அவர்களை ஜெயிக்க முடியாது எனத் தெரியும், ஆனால் அவர்களோடு நானும் இருக்கிறேன் என நின்றேன்.
அது மட்டும் போதுமா ? இப்போது நான் மதன்கார்கியோடு போட்டிபோடுகிறேன். அவரை ஆஸ்திரேலியாவிற்கு படிக்க அனுப்பினேன். விஞ்ஞானம் படித்துவிட்டு வந்து பேராசிரியர் ஆனார். ஆனால் எனக்குப் போட்டியாக வருவார் என நினைக்கவில்லை. இந்தப்படத்தில் அருமையான வரிகள் தந்துள்ளார். அவருக்கு இந்தப்படத்திற்குத் தேசியவிருது கிடைக்க வாழ்த்துக்கள். கணேஷ்பாபு நினைவுகளின் வலியை இப்படம் மூலம் பதிவு செய்துள்ளார். அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று பேசினார்.