Tamilசெய்திகள்

சிறுவர்களின் ஆபாச வீடியோக்கள் விவகாரம் – அரசியல் பிரமுகர் உள்ளிட்ட 30 பேரிடம் விசாரணை

இணையதளங்களில் சிறுவர்-சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து பரப்புவது மற்றும் ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக அமெரிக்காவில் இருந்து மத்திய அரசுக்கு ஒரு தகவல் அனுப்பப்பட்டது.

இதனை தமிழக போலீசுக்கு அனுப்பிய மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியது.

இதனைத் தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. ரவி, சில நாட்களுக்கு முன்பு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

தமிழகத்தில் ஆபாச படங்களை டவுன்லோடு செய்து பார்ப்பவர்களின் ஐ.பி. முகவரி தயாராக இருப்பதாகவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்து இருந்தார். இது செல்போனில் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை பார்ப்பவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.

இதன்படி திருச்சியில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து நண்பர்களுக்கு அனுப்பிய குற்றத்துக்காக திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் என்ற வாலிபர் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

திருச்சி பாலக்கரை காஜாபேட்டை புதுதெருவை சேர்ந்த இவர் ஏ.சி. மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். இவரை திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் இவரது ஐ.பி. முகவரியை வைத்து கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

திருச்சி போலீஸ் கமி‌ஷனர் வரதராஜூ உத்தரவின் பேரில், உதவி கமி‌ஷனர் மணிகண்டன், இன்ஸ்பெக்டர் ஆனந்த வேதவள்ளி ஆகியோர் கிறிஸ்டோபரிடம் தீவிர விசாரணை நடத்தி ஆபாச வீடியோக்களை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கிறிஸ்டோபரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கிறிஸ்டோபரிடம் இருந்து விலை உயர்ந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் நிலவன் என்ற புனை பெயரில் பேஸ்புக் கணக்கு தொடங்கி அதில் குழந்தைகள், சிறுமிகளுடன் வன்புணர்வில் ஈடுபடும் காமுகர்களின் ஆயிரக்கணக்கான படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.

கடந்த 4 வருடங்களாக கிறிஸ்டோபர் இதனை செய்து வந்துள்ளார். அவருடன் 150 பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இணையதள நண்பர்கள் தொடர்பில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 42 வயதான கிறிஸ்டோபர் இதற்கு அடிமையாக இருந்துள்ளார். குழந்தைகள் வீடியோக்களை பார்த்து பார்த்து மனநோயாளிபோல் மாறியுள்ளார்.

கிறிஸ்டோபர் திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் சிறுமிகள், குழந்தைகளை ஏமாற்றி வீடியோ பதிவு செய்து அதனை வெளிநாட்டு ஆபாச வெப் சைட்டுகளுக்கு பரப்பி பணம் குவித்தாரா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்காக கிறிஸ்டோபரின் செல்போன், மெமரி கார்டுகள் சென்னையில் உள்ள தடயவியல் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிக்கை கிடைக்க பெற்றதும் இது தொடர்பான விசாரணை மேலும் தீவிரப்படுத்தப்படும்.

கிறிஸ்டோபரின் 150 நண்பர்களின் பட்டியலை திரட்டி திருச்சி, சென்னை, செங்கல்பட்டு, கோவை ஆகிய 4 மாவட்ட போலீசாருக்கு திருச்சி போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். இந்த 4 மாவட்டங்களில் உள்ள கிறிஸ்டோபரின் நண்பர்களிடமும் விசாரணை நடக்கிறது.

திருச்சியில் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் நண்பர்கள் உள்பட 30 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிறிஸ்டோபருடன் தொடர்பில் இருந்த நண்பர்கள் பலர் தங்களது செல்போனை சுவிட்ச்ஆப் செய்து விட்டு தலைமறைவாகி விட்டனர்.

டிப்ளமோ படித்து விட்டு திருச்சி, நாகர்கோவில் உள்பட பல இடங்களில் வேலைபார்த்துள்ள கிறிஸ்டோபர் அரசியல் கட்சியிலும் இருந்துள்ளார். அப்போது பல்வேறு கட்சி பிரமுர்களுடன் நெருங்கி பழகியுள்ளார். கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்டுள்ளது முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் மத்தியில் அதிர்ச்சி கலந்த கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமாகி 10 வருடமாகியும் கிறிஸ்டோபருக்கு குழந்தை இல்லை. இதன் பிறகுதான் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்டதும் அவரது மனைவி தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

சிறுமிகள் மற்றும் பெண் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துபவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சிறுமிகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பதும் போக்சோ சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமே ஆகும். இதன் அடிப்படையில், கிறிஸ்டோபர் மீது போக்சோ சட்டமும் பாய்ந்துள்ளது. தமிழகத்தில் ஆபாச வீடியோ பார்த்தவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *