X

சிறுமியிடம் கருமுட்டை எடுக்கப்பட்ட விவகாரம் – தாய் உள்ளிட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் சட்டவிரோதமாக கருமுட்டை எடுக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, பெண் புரோக்கர் மாலதி, போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்த ஜான் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிறுமியின் தாய், பெண் புரோக்கர் மாலதி மற்றும் ஆதார் அட்டை போலியாக தயாரித்து கொடுத்த ஜான் ஆகியோர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறுமியின் வளர்ப்பு தந்தை கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவ குழுவினர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். மேலும் பெண் புரோக்கர் மாலதியை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். மேலும் ஆஸ்பத்திரிகளிலும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணை அறிக்கையை மருத்துவ குழுவினர் தமிழக அரசிடம் வழங்கினர். இதையடுத்து சிறுமியிடம் சட்ட விரோதமாக கருமுட்டை எடுத்த ஆஸ்பத்திரிகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் சிறுமி கருமுட்டை விற்ற விவகாரத்தில் கைதாகி சிறையில் உள்ள சிறுமியின் தாய் உள்பட 4 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பரிந்துரையின் பேரில் 4 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டார். இதுதொடர்பான நகல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரிடமும் வழங்கப்பட்டது.