சிறுபான்மை மக்களிடம் எதிர்க்கட்சிகள் அச்சத்தை ஏற்படுத்துகிறார்கள் – முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு
என்பிஆர் தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய கடிதத்திற்கு மத்திய அரசு இன்னும் பதில் அளிக்காததால் தமிழகத்தில் என்பிஆர் கணக்கெடுப்பு நிறுத்திவைக்கப்படுவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியிருந்தார். இந்த விவகாரம் இன்று மீண்டும் சட்டசபையில் எழுப்பப்பட்டது.
தமிழக சட்டசபையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, என்பிஆர் நிறுத்தி வைக்கப்பட்டது தொடர்பாக பேரவையில் அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதற்காக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பின்னர் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, என்பிஆர் விஷயத்தில் சிறுபான்மை மக்களிடையே எதிர்க்கட்சிகள் அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது என கேட்டுக்கொண்டார்.
‘என்பிஆர் விவகாரத்தில் பொதுமக்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். சிறுபான்மை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தாமல் உண்மைகளை மக்களுக்கு எடுத்து சொல்லுங்கள். எந்த இடத்தில் பாதிப்பு என்பதை சொல்லாமல் அமைதி மாநிலமாக இருக்கும் தமிழகத்தில், டெல்லி போன்று பதற்றத்தை உருவாக்க வேண்டாம். சட்டசபைக்கு உள்ளே ஒன்று பேசி, வெளியே சென்று வேறு மாதிரியாக பேசி, எதிர்க்கட்சிகள் பெரிதாக்கக் கூடாது’ என முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.
அதன்பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசும்போது, தமிழகத்தில் என்பிஆர் பணிகள் தொடங்கப்படவில்லை என அறிவித்தார். நேற்று பேரவைக்கு வெளியே வெளியே செய்தியாளர்களிடம் கூறிய நிலையில் இன்று பேரவையில் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.