X

சிறுபான்மையினர் பற்றி தவறான கருத்து – பா.ஜ.கவில் இருந்து செய்தித் தொடர்பாளர்கள் நீக்கம்

சிறுபான்மையினரைப் பற்றியும், முகமது நபி குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா மற்றும் டெல்லி பாஜக ஊடகத் தலைவர் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக பாஜக பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்துத் மதங்களையும் பாஜக மதிப்பதாகவும், எந்த ஒரு மதமும் இழிவுபடுத்தப்படுவதை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு மதத்தையும் இழிவுப்படுத்துபவர்களை பாஜக ஊக்குவிக்காது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

பாஜகவின் இந்த நடவடிக்கை நாட்டை ஏமாற்றும் முயற்சி என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, பாஜக கருத்து அப்பட்டமான போலியான பாசாங்கு என்றும், இது வெளிப்படையான கேலிக்கூத்து என்றும், நாட்டை கட்டுப்படுத்துவதற்கான மற்றொரு முயற்சி என்றும் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசு மதவன்முறை, பிளவுபடுத்தும் பழமைவாதம் மற்றும் வாக்கு வங்கி அரசியலைப் பாதுகாப்பதற்காக வெறுப்பை வளர்க்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.