X

சிறுபான்மையினர் உரிமைகளை காக்க திமுக தொடர்ந்து செயலாற்றும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை கோயம்பேட்டில் மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற கருணாநிதியின் நூற்றாண்டு விழா மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சு போட்டி பரிசளிப்பு விழாவில் மாநில அளவில் வெற்றி பெற்ற 6 மாணவ-மாணவிகளுக்கு பரிசுத் தொகைக்கான காசோலைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி பாராட்டினார். அப்போது அவர் பேசியதாவது:-

எப்போதும் என்னை சுறுசுறுப்பாக வைத்திருக்கக் கூடிய, ஊக்கம் தரக்கூடிய வகையில் என்னை இயக்கிக் கொண்டிருக்கக் கூடியவர்கள் யார் என்று கேட்டால், மாணவர்களும், இளைஞர்களும்தான். எனவே, அப்படிப்பட்ட மாணவ மாணவியர்கள் நிரம்பியிருக்கக்கூடிய இந்த நிகழ்ச்சியில், உங்களிடையே இருப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

திராவிட இயக்கம் என்பதே பேசிப்பேசி வளர்ந்த இயக்கம். திராவிட இயக்கம் என்பதே எழுதி எழுதி வளர்ந்திருக்கக்கூடிய இயக்கம் என்பது எல்லோருக்கும் தெரியும். நமது தி.மு.க. அரசு எப்போது ஆட்சிப் பொறுப்பேற்கிறதோ, அப்போதெல்லாம் சிறுபான்மையினர் நலனுக்காக போராடக்கூடிய, வாதாடக்கூடிய, சாதனைகளை தீட்டக்கூடிய பல்வேறு பணிகளை நிறைவேற்றி தந்திருக்கிறது என்பதெல்லாம் ஒரு மிகப்பெரிய வரலாறு.

இப்படி சிறுபான்மையினர் நலன் காக்கும் ஏராளமான திட்டங்களை நம்முடைய அரசின் மூலமாக நாம் தொடர்ந்து செய்து வருகிறோம். சிறுபான்மையினர் உரிமைகளைக் காக்க மக்கள் மன்றத்திலும் தி.மு.க. தொடர்ந்து செயலாற்றிடும் என்ற உறுதியை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், செஞ்சி மஸ்தான், மேயர் பிரியா, ஏ.எம்.வி.பிரபாகரராஜா, சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags: tamil news