X

சிறிசேனா அதிரடி நடவடிக்கை – இலங்கை உளவுத்துறை தலைவர் பதவி நீக்கம்

இலங்கையில் ஏப்ரல் 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது 3 ஓட்டல்கள் மற்றும் 3 தேவாலயங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 258 பேர் பலியானார்கள். 500 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நடந்த நாளில் இருந்தே இலங்கையில் ஒரு நெருக்கடி நிலை நிலவி வருகிறது. சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க மேற்கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு உரிய வழிகாட்டுதல்களை பெறலாம்.

இந்த குண்டுவெடிப்பு நடப்பதற்கு முன்பாகவே இந்தியாவில் இருந்து இலங்கையில் ஐ.எஸ். இயக்கத்தினர் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக எச்சரித்ததாகவும், இதுபற்றி அதிபர் சிறிசேனாவிடம் தெரிவித்ததாகவும் இலங்கையின் தேசிய உளவுத்துறை தலைவர் சிசிரா மெண்டிஸ் கூறியிருந்தார்.

ஆனால் இதனை அதிபர் சிறிசேனா தொடர்ந்து மறுத்துவந்தார். நடைபெற இருக்கும் தாக்குதல் பற்றி தனக்கு எதுவும் தெரியாது. தாக்குதல் நடைபெறுவதற்கு 13 நாட்கள் முன்னதாக கூட தேசிய போலீஸ் தலைவர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும், அப்போதும் எந்த அதிகாரியும் தாக்குதல் எச்சரிக்கை குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

இலங்கை குண்டுவெடிப்பு பற்றி பாராளுமன்ற தேர்வுக்குழு விசாரணை நடத்தியது. கடந்த வாரம் இந்த விசாரணையில் சாட்சியம் அளித்த உளவுத்துறை தலைவர் சிசிரா மெண்டிஸ், இந்த தாக்குதல் தவிர்க்கப்பட்டு இருக்கலாம் என தெரிவித்தார். அதிபர் தொடர்ந்து பாதுகாப்பு தொடர்பான கூட்டங்கள் நடத்த தவறிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் தேசிய உளவுத்துறை தலைவர் சிசிரா மெண்டிஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்த பதவி நீக்கத்துக்கான காரணம் குறித்து அதிபர் அலுவலகம் எந்த காரணமும் தெரிவிக்கவில்லை. குண்டுவெடிப்பு நடப்பதற்கு முன்பு பாதுகாப்பு குறைபாடு நிலவியது குறித்து பாராளுமன்ற விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் அவர் நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உளவுத்துறை தலைவர் சாட்சியம் அளித்தபோது நேரடி ஒளிபரப்பு அதிபர் உத்தரவின் பேரில் பாதியிலேயே நிறுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குண்டுவெடிப்பு குறித்து பாராளுமன்ற குழு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை இரவு மந்திரிசபை அவசர கூட்டத்தை அதிபர் சிறிசேனா கூட்டினார். ஆனால் இந்த கூட்டம் பாராளுமன்ற குழு விசாரணையை நிறுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்காமலேயே முடிவடைந்தது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு இன்று செல்ல இருக்கும் நிலையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.