X

சிறந்த கேப்டன் கங்குலியா? டோனியா? – வீரேந்திர ஷேவாக் பதில்

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களாக கருதப்படுபவர்கள் சவுரவ் கங்குலி, மகேந்திரசிங் டோனி. இருவரும் இந்திய கிரிக்கெட்டுக்கு புத்துயிர் அளித்தவர்கள்.

கங்குலி தலைமையில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றி இருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை சமன் செய்து இருந்தது. 2002-ல் இங்கிலாந்தில் நாட்வெஸ்ட் கோப்பையை வென்றது. 2003-ல் உலக கோப்பை இறுதிப்போட்டி வரை வந்தது.

டோனி தலைமையில் இந்திய அணி 2 உலக கோப்பையை (2007-ல் 20 ஓவர், 2011-ல் ஒருநாள் போட்டி) கைப்பற்றியது. அதோடு ஐ.சி.சி. சாம்பியன் டிராபியை 2013-ல் வென்று கொடுத்தார் டோனி. முதல் முறையாக இந்திய அணியை டெஸ்டில் நம்பர் ஒன் இடத்துக்கும் கொண்டு வந்தார்.

கங்குலி, டோனி தலைமையின் கீழ் பல வீரர்கள் விளையாடினர். அவர்களில் முக்கியமானவர் வீரேந்திர ஷேவாக். இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான அவர் இருவரில் யார் சிறந்த கேப்டன் என்பது குறித்து பதில் அளித்து உள்ளார். இது தொடர்பாக ஷேவாக் கூறியதாவது:-

இருவருமே சிறந்த கேப்டன்கள். ஆனால் கங்குலியையே சிறந்த கேப்டனாக நான் நினைக்கிறேன். ஏனென்றால் அவர் புதிதாக ஒருஅணியை உருவாக்கினார். நம்பிக்கைக்கு உரிய வீரர்களை தேர்ந்தெடுத்து அணியை மீண்டும் கட்டமைத்தார்.

இந்திய அணிக்கு வெளிநாடுகளில் எப்படி வெற்றி பெற வேண்டும் என்று கற்றுக்கொடுத்தவர் கங்குலி ஆவார். நாங்கள் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை சமன் செய்தோம்.

டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற கற்றுக்கொடுத்தார். கங்குலி இள மற்றும் திறமையான அணியை ஒன்று சேர்த்தார்.

கங்குலி விட்டுச்சென்ற அந்த வேலையை டோனி சிறப்பாக தொடர்ந்தார். கங்குலி கட்டமைத்த அணியை அவர் சிறப்பாக மேம்படுத்தினார்.

டோனி புதிய அணியை தயார் செய்ய மிகவும் அதிகமாக சிரமப்படவில்லை. இருவருமே சிறந்த கேப்டன்கள் ஆவார்கள். ஆனால் எனது கருத்து என்னவென்றால் கங்குலிதான் சிறந்த கேப்டன் ஆவார்.

இவ்வாறு ஷேவாக் கூறி உள்ளார்.