சிரியாவில் ராணுவ விமானத்தை தாக்கி அழித்த போராட்டக்காரர்கள்
சிரியாவில் 8 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அரசு படைகளுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகின்றனர். அதே சமயம் அரசுக்கு ஆதரவாக ரஷிய படைகள் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.
கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த பெரும்பாலான நகரங்களை ரஷியாவின் உதவியோடு அரசு படைகள் மீட்டுவிட்டன. எனினும் இத்லீப், வடக்கு ஹமா மற்றும் அலெப்போ மாகாணங்கள் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ளன. அவற்றை கிளர்ச்சியாளர்களிடம் இருந்து மீட்பதற்கு அரசு படை போராடி வருகிறது. குறிப்பாக இத்லீப் மாகாணத்தை மீட்டெடுப்பதற்காக இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சிரியா மற்றும் ரஷியா படைகள் அதிதீவிர தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் இத்லீப் மாகாணத்தில் உள்ள கான் ஷேக்கவுன் நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்த ராணுவ விமானத்தை கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தினர். இந்த விமானத்தில் இருந்த விமானியை கிளர்ச்சியாளர்கள் சிறைப்பிடித்து வைத்துள்ளனர்.
ராணுவ விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை சிரிய ராணுவம் உறுதிப்படுத்தி உள்ளது. அதே சமயம் விமானியின் கதி என்ன என்பது தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.