X

சிரியாவில் இரட்டை குண்டு வெடிப்பு! – ஐ.நா கண்டனம்

சிரியாவில் அரசுப் படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்து வரும் உள்நாட்டுப் போரில் பொதுமக்கள் பலியாவது தொடர்கிறது. கடந்த திங்கட்கிழமையன்று இட்லிப் நகரின் அருகே உள்ள அல்குசார் பகுதியில் நடந்த இரட்டைக் குண்டுவெடிப்பில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட 17 பேர் உயிரிழந்தனர். சுமார் 100 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐநா சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஐநா பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறியதாவது:-

சிரியாவின் வடமேற்குப் பகுதியில் நடந்து வரும் உள்நாட்டு சண்டை மற்றும் அதிகரித்து வரும் உயிர்ப்பலி தொடர்பாக வரும் தகவல்களால் ஐநா கடும் கவலை அடைந்துள்ளது.

போர் காரணமாக இட்லிப் மாகாணத்தில் மட்டும் 130 பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. இதனால் சுமார் 50 ஆயிரம் குழந்தைகளின் கல்வி தடைபட்டுள்ளது.

மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்களின் அத்தியாவசிய உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை தடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து தரப்பையும் ஐநா சபை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.