சிரஞ்சீவி படத்திற்கு நரசிம்ம ரெட்டியின் குடும்பத்தார் எதிர்ப்பு!
ஆந்திராவை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு ‘சைரா நரசிம்ம ரெட்டி’ என்ற பெயரில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் படமாகி உள்ளது. இதில் சிரஞ்சீவி-நயன்தாரா ஜோடியாக நடித்துள்ளனர். மேலும் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, அனுஷ்கா, தமன்னா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.
இப்படத்தை ரூ.300 கோடி செலவில் சிரஞ்சீவி மகன் ராம்சரண் தேஜா தயாரித்துள்ளார். இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. தெலுங்கில் தியேட்டர் உரிமை ரூ.140 கோடிக்கு விற்பனையானதாக கூறப்பட்டது. அனைத்து மொழி சாட்டிலைட் உரிமையும் ரூ.125 கோடிக்கு விற்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன்மூலம் படத்துக்கு செலவு செய்த தொகை அனைத்தும் ராம்சரணுக்கு கிடைத்து விட்டது என்கின்றனர். அடுத்த மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளனர். இந்த நிலையில் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் குடும்பத்தினர் படத்துக்கு திடீர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறும்போது, “நரசிம்ம ரெட்டி வாழ்க்கையை படமாக்குவதற்காக அவரது குடும்பத்தினரான எங்களுக்கு ரூ.50 கோடி தருவதாக ராம்சரண் வாக்குறுதி அளித்து இருந்தார். ஆனால் சொன்னபடி பணம் தரவில்லை” என்றனர். படத்துக்கு எதிராக வழக்கு தொடரவும் தயாராகி வருகிறார்கள். பிரச்சினையை சுமுகமாக தீர்த்து திட்டமிட்ட தேதியில் படத்தை திரைக்கு கொண்டு வர பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.