சிம்பு படத்தில் பாரதிராஜா வில்லன் இல்லை – தயாரிப்பாளர் விளக்கம்
நடிகர் சிம்புவின் நடிப்பில் கடைசியாக வெளியான ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்துக்குப் பிறகு அவர் நடிப்பில் உருவாக உள்ள படம் ‘மாநாடு’. வெங்கட் பிரபு இயக்கவிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதமே தொடங்க இருந்த நிலையில் சில காரணங்களால் ஜூன் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
எப்போதும் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட படங்களை இயக்கி வரும் வெங்கட் பிரபு முதன்முறையாக அரசியல் திரில்லர் கலந்த கதையை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார். எடிட்டராக பிரவீன் கே.எல் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது.
இந்த படத்தில் வெங்கட் பிரபுவின் தந்தையும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் சிம்புவுக்கு வில்லனாக களமிறங்குகிறார் என்ற செய்தி சமூக ஊடகங்களில் பரவியது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மிகவும் தூண்டியது. ’அப்போது என் தந்தை மாநாடு படத்தில் வில்லனாக நடிக்கவில்லை; வேறு நடிகரிடம் வில்லனாக நடிக்க கேட்டு வருகிறோம். இதுபோன்று பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்’ என வெங்கட் பிரபு கேட்டுக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து தற்போது மாநாடு படத்தில் வில்லனாக பாரதிராஜா நடிக்கிறார் என்ற செய்தி பெரிய அளவில் பரவியதைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் இந்த படத்தில் பாரதிராஜா நடிப்பது உண்மைதான். ஆனால் வில்லன் கதாபாத்திரம் கிடையாது என்று தெரிவித்தார்.