X

சிம்பு தொடர்ந்த மானநஷ்டஈடு வழக்கு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சிம்பு நடித்து கடந்த 2016-ம் ஆண்டு வெளியான திரைப்படம், அன்பானவன், அடங்காதவன், அசராதவன். இந்த திரைப்படத்தை மைக் கேல் ராயப்பன் தயாரித்து இருந்தார். இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் சிம்புக்கு ரூ.8 கோடி சம்பளம் பேசி, ரூ.1.51 கோடி முன்பணம் கொடுக்கப்பட்டது. பாக்கி சம்பளத்தை மைக்கேல் ராயப்பனிடம் இருந்து பெற்றுத்தரும்படி, நடிகர் சங்கத்தில் சிம்பு புகார் மனு அளித்தார்.

அதேநேரம், இந்த படத்தினால் தனக்கு ஏற்பட்ட பண இழப்பை நடிகர் சிம்புவிடம் இருந்து வசூலித்து தரும்படி தயாரிப்பாளர் சங்கத்தில் மைக்கேல் ராயப்பன் புகார் செய்தார். இந்த விவகாரத்தில் தனக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் விதமாக மைக்கேல் ராயப்பன் ஊடகங்களுக்கு அவதூறு பேட்டி கொடுத்ததாகவும்,

இதற்காக அவரிடம் இருந்து ரூ.1 கோடி மானநஷ்டஈடு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் நடிகர் சிம்பு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவில், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷாலை எதிர்மனுதாரராக சிம்பு சேர்த்து இருந்தார். இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நடிகர் சங்கத்தை நிர்வகிக்க தமிழக அரசு சிறப்பு அதிகாரியை நியமித்துள்ளதாகவும், நடிகர் விஷால் தற்போது நடிகர் சங்கத்தின் நிர்வாகியாக இல்லை என்றும் கூறப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த வழக்கில் நடிகர் சங்கத்தின் சிறப்பு அதிகாரியை எதிர்மனுதாரராக சேர்க்கும்படி நடிகர் சிம்புவுக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 3-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.