`வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் `மாநாடு’ படத்திற்காக தயாராகி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கும் நிலையில், சிம்பு அடுத்ததாக கன்னட இயக்குநர் நார்தன் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
சிம்புவின் 45-வது படமாக உருவாகும் இதில் கவுதம் கார்த்திக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதிக பெருட்செலவில் ஆக்ஷன் கலந்த த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.
இதுபற்றி ஞானவேல் ராஜா கூறும்போது, முன்னணி கதாநாயகிகள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவற்றை இறுதி செய்யும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன, விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றார்.
நவீன்குமார் ஒளிப்பதிவாளராகவும், மதன் கார்க்கி வசனகர்த்தாவாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 2019 ஜூன் முதல் வாரம் படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளது.
ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் கவுதம் கார்த்திக் நடித்துள்ள `தேவராட்டம்’ படம் வருகிற மே 1-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.