சிபிஐ-யை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது – டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா
மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். மொத்தம் 30 இடங்களில் 14 மணி நேரம் இந்த சோதனை நீடித்தது.
இதையடுத்து சிசோடியா, டெல்லி கலால் துறை அதிகாரிகள், மதுபான நிறுவன நிர்வாகிகள், டீலர்கள், ஊழியர்கள் உள்பட 15 பேர் மீது சிபிஐ தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிபிஐ சோதனை நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் மணீஷ் சிசோடியா கூறியுள்ளதாவது:
சிபிஐ குழு, எனது வீட்டை சோதனை செய்து எனது கணினி மற்றும் தொலைபேசியை கைப்பற்றினர். எனது குடும்பத்தினர் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளித்தனர், தொடர்ந்து ஒத்துழைப்போம். நாங்கள் எந்த ஊழலோ, தவறோ செய்யவில்லை. நாங்கள் பயப்படவில்லை. சிபிஐ தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது எங்களுக்குத் தெரியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சிசோடியா விட்டில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. எதிர்க் கட்சிகளை மத்திய அரசு குறி வைப்பதாக அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார்.
டெல்லி துணை முதல்வர் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளதை ராஷ்டிரிய ஜனதாதளம் விமர்சித்துள்ளது. மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக அரசியல் ரீதியாக ஆம் ஆத்மி போராட முன் வர வேண்டும் என்று அக்கட்சியின் எம்பி மனோஜ் ஜா குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, டெல்லி மதுபான கடை உரிமம் வழங்கியதில் பெரும் ஊழல் நடந்துள்ளது என்று மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டியுள்ளார்.
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட அன்றே டெல்லி அரசு, மதுக் கொள்கையை வாபஸ் பெற்றதாகவும், ஒரு ஊழல்வாதி தன்னை நிரபராதி என்று நிரூபிக்க எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், அவர் ஊழல்வாதியாகவே இருப்பார் என்றும், அனுராக் தாக்கூர் குறிப்பிட்டுள்ளார்.