X

சினிமா போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தொடங்கியது

கொரோனா ஊரடங்கால் திரைப்பட தொழில் முற்றிலுமாக முடங்கியது. படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. தியேட்டர்களை மூடினர். இந்தநிலையில் ஊரடங்கு தளர்வில் சினிமா படப்பிடிப்புக்கு பிந்தைய டப்பிங், ரீ ரிக்கார்டிங், எடிட்டிங் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகளை தொடங்க அனுமதி அளிக்கும்படி அரசுக்கு திரையுலக சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.

அதை ஏற்று படத்தொகுப்பு (எடிட்டிங்), குரல் பதிவு (டப்பிங்), ‘டி.ஐ’ எனப்படும் நிற ‘கிரேடிங்’, பின்னணி இசை, ஒளிக்கலவை ஆகிய தொழில்நுட்ப பணிகளை தலா 5 பேரை வைத்து மேற்கொள்ளவும், ‘கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்’ மற்றும் ‘விசுவல் கிராபிக்ஸ்’ பணிகளை 10 முதல் 15 பேரை வைத்து நடத்தவும் அரசு அனுமதி வழங்கியது. இந்த தொழில்நுட்ப பணிகள் நேற்று தொடங்கின.

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2, விஷால் நடிக்கும் சக்ரா, திரிஷா நடிக்கும் ராங்கி ஆகிய படங்களின் எடிட்டிங், கபடதாரி மற்றும் பெயர் வைக்கப்படாத ஒரு படத்தின் டப்பிங் பணிகள் நடந்தன. 3 டெலிவிஷன் தொடர்களின் தொழில்நுட்ப பணிகளும் தொடங்கின. மேற்கண்ட தகவலை பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

ஸ்டூடியோக்களில் இந்த பணிகள் அனைத்தும் அரசு அறிவுறுத்தல்படி சமூக இடைவெளியுடன் நடந்தன. இதில் பங்கேற்றவர்கள் முக கவசம் அணிந்திருந்தனர். இன்று முதல் மேலும் பல படங்களின் தொழில்நுட்ப பணிகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.