Tamilசினிமா

சினிமா என்பது வியாபாரம் – கமல்ஹாசன்

கொரோனா ஊரடங்கினால் வீட்டில் இருக்கும் சினிமா பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கலந்துரையாடி வருகின்றனர். இதில் கமல்ஹாசன் சில சுவாரசியமான விஷயங்களை தெரிவித்தார். அவர் கூறியதாவது: “நான் விளையாட, பாலச்சந்தர் எனக்கு நிறைய இடம் கொடுத்தார். அவருடன் 36 படங்களில் பணியாற்றினேன். மலையாள சினிமாவில் தொழில்நுட்ப கலைஞனாக வேலை செய்தபோது பாலுமகேந்திராவின் பரிச்சயம் கிடைத்தது.

நான் ஒளிப்பதிவு கற்க வேண்டும் என்று அவரிடம் சொன்னேன். சொல்லித் தருகிறேன் என்றார். பாலுமகேந்திராவுக்கு வணிக சினிமா மீது அப்போது கோபம் இருந்தது. எனக்கு நகைச்சுவை, சீரியஸ் கதாபாத்திரங்கள் இரண்டையும் செய்த சார்லி சாப்ளின் மீது ஈடுபாடு இருந்தது. அப்படி நாம் ஏன் செய்ய கூடாது? மக்களை சென்றடையும் படங்களை எடுப்பதில் என்ன அவமானம்? என்று பேசினேன். நான் பேசியதைத்தான் அவரும் நானும் சேர்ந்து படமாக எடுத்தோம். அதுதான் மூன்றாம் பிறை.

சகலகலா வல்லவன் படத்தை பாலுமகேந்திராவும், நண்பர்களும் திட்டினர். நானும் சேர்ந்து படத்தை திட்டினேன். அதன்பிறகு யோசித்தேன். அந்த வழியில் நான் செல்லாமல் இருந்திருந்தால் ராஜ்கமல் பட நிறுவனம் தொடங்கி இருக்க முடியாது. சினிமா என்பது வியாபாரம். நான் தர்மத்துக்காக நடிக்கவில்லை. எனக்கும் கார் வாங்க வேண்டும், எம்.ஜி.ஆர்., சிவாஜிபோல் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது.

எனவே மக்களை மகிழ்விக்க மாட்டேன் என்று வீம்பு செய்ய கூடாது. என்னை பார்த்து உலக நாயகன் என்று அழைப்பதில் சந்தோஷம் கிடையாது. நாம் சொன்னது மக்களிடம் போய் சேருவதில்தான் மகிழ்ச்சி. சார்லி சாப்ளின் ஒரு படத்தில் கால் சுருங்குவதுபோல் நடித்து இருந்தார். அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ளமான கதாபாத்திரம் அதை பார்த்த பிறகுதான் மனதில் தோன்றியது.

இவ்வாறு கமல் ஹாசன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *