இந்தி நடிகர் அமிதாப்பச்சன் 1969-ல் ‘சாட்ஹிந்துஸ்தானி’ படத்தில் அறிமுகமாகி சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். 50 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் 190 படங்களுக்கு மேல் நடித்து உலக ரசிகர்களை தன்பால் இழுத்து வைத்துள்ளார். இந்தி நடிகை ஜெயபாரதியை திருமணம் செய்து கொண்டார். பல தேசிய விருதுகளை பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார்.
அமிதாப்பச்சனுக்கு இப்போது 77 வயது ஆகிறது. அவருக்கு சில மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்படுவதும் பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமடைந்து மீண்டும் படப்பிடிப்புக்கு சென்று நடிப்பதுமாக இருக்கிறார். இப்போது 2 இந்தி படங்களில் நடித்து வருகிறார். பிரம்மஸ்திரா இந்தி படத்தின் படப்பிடிப்புக்காக நீண்ட பயணம் மேற்கொண்ட அவரை காண வழிநெடுக ரசிகர்கள் திரண்டு நின்றனர். அதை பார்த்து சந்தோஷப்பட்டார்.
இந்த நிலையில் நடித்தது போதும் இனிமேல் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன் என்று அமிதாப்பச்சன் அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “எனது உடல் ஓய்வு கேட்கிறது. மனது ஒன்றை யோசிக்கிறது. ஆனால் உடல் இன்னொன்றை செய்கிறது. அதனால் இனிமேல் நடிப்பில் இருந்து ஓய்வு எடுத்துக்கொள்ள முடிவு செய்து இருக்கிறேன்” என்றார்.