Tamilசினிமா

சினிமாவில் நமக்கான வாய்ப்புகளை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும் – நடிகர் கருணாஸ் பேச்சு

ஷார்க் 9 பிக்சர்ஸ் சார்பில் சிவா கில்லாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முதன்மைப் பாத்திரங்களில் நடித்திருக்கும் படம் ’போகுமிடம் வெகு தூரம் இல்லை’. அறிமுக இயக்குநர் மைக்கேல் கே ராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

சமீபத்தில் இந்த படம் தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகர் கருணாஸ், “இயக்குநர் ஆணித்தரமாக அழுத்தமாகப் பேசக் காரணம் அவரது திறமை தான். அத்தனை சிறப்பாகப் படம் எடுத்துள்ளார். தயாரிப்பாளர் சிவா மிக நல்ல மனம் கொண்டவர். நியூசிலாந்து போய் சாதித்துக் காட்டிய இந்தியன். 24 ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கிறேன் ஆனால் யாரிடமும் நான் போய் வாய்ப்பு கேட்டதில்லை.

சினிமா உலகம் யாரையும் மதிக்காது, நமக்கான வாய்ப்புக்களை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். திரைத்துறை என்பது மிகப்பெரிய பயணம். மைக்கேல் இந்தக்கதை இப்படி தான் வரவேண்டுமெனப் பிடிவாதமாக எடுத்துக் காட்டியுள்ளார்.

என்னையும் விமலையும் வித்தியாசமாகக் காட்டியுள்ளார். அவருடன் எனக்கு இது தான் முதல் படம். நான் ஒரு ஹீரோவுடன் நடித்த எல்லாப் படமும் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்தக்கதையைக் கேட்டு இந்தப்படம் நடித்தால் நாம் இறந்த பிறகு பேர் சொல்லிக்கொள்ளும் படமாக இருக்குமென என் குடும்பத்தினரிடம் சொன்னேன்.

ஆனால் ஒரு கட்டத்தில் இந்த வாய்ப்பு என் கையை விட்டுப் போனது, ஆனால் நாம் நடிக்கனும் எழுதியிருந்தால் அது நடக்கும் அப்படிதான் இப்போது நடந்துள்ளது. மகிழ்ச்சி. இந்தப்படத்திற்காக உண்மையாக உழைத்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் என் வாழ்த்துக்கள். எல்லோருக்கும் பெருமை சேர்க்கும் படமாக இருக்கும் நன்றி.” என்று தெரிவித்தார்.