திரைப்படங்களை கட்டுப்படுத்தும் வகையில் ஒளிப்பதிவு சட்டம் அமலில் உள்ளது. இதில் திருத்தப்பட்ட வரைவு சட்ட மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த சட்ட திருத்தத்தின்படி சென்சார் சான்றிதழ் பெற்ற பிறகு படம் திரைக்கு வந்தாலும் அதில் ஆட்சேபணைக்குரிய காட்சிகள் இருந்தால் மத்திய அரசு பார்த்து சென்சாருக்கு மறு தணிக்கைக்காக அனுப்பி வைக்கப்படும். இந்த திருத்தப்பட்ட சட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கமல்ஹாசன், அனுராக் காஷ்யப், வெற்றிமாறன், பா.ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், சூர்யா உள்ளிட்ட பலர் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போது நடிகர் கார்த்தி, இந்த சட்டத்தில் மேற்கொள்ள உள்ள திருத்தத்தை கைவிட வேண்டும் என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அதுபோல் விஷால் வெளியிட்டுள்ள பதிவில், ‘பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் எங்கே? இப்படி ஒரு பரபரப்பான மாற்றங்கள் ஏன்? சினிமா துறையை எப்போதும் ஏன் குறிவைக்க வேண்டும்? முதல் ஜிஎஸ்டி, பின்னர் பைரசி, இப்போது இந்த சட்டம்? இந்தச் சட்டத்தைக் கொண்டுவருவது நியாயமில்லை.’. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.