Tamilசெய்திகள்

சித்ரா பவுர்ணமிக்காக திருவண்ணாமலைக்கு 6 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இந்த வழிபாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் சித்திரை மாதத்தில் வரக்கூடிய பவுர்ணமி மிகுந்த விசேஷ நாளாக கருதப்படுகிறது.

இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி மே மாதம் தொடக்கத்திலேயே அதாவது 4-ந் தேதி நள்ளிரவு தொடங்கி 5-ந் தேதி வரை இருப்பதால் 2 நாட்கள் திருவண்ணாமலை கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை 29-ந் தேதியில் இருந்து விடப்படுவதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் குடும்பம் குடும்பமாக வரக்கூடும்.

இதனை கருத்தில் கொண்டு திருவண்ணாமலைக்கு மே 4, 5 ஆகிய தேதிகளில் 6 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு, தாம்பரம், விழுப்புரம், காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, கோவை, மதுரை, கும்பகோணம், தஞ்சாவூர், தர்மபுரி, ஓசூர், திருச்சி, புதுச்சேரி, கடலூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடந்த ஆண்டை விட கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சித்ரா பவுர்ணமி இந்த ஆண்டு மாத தொடக்கத்தில் வருவதால் கோடை விடுமுறையில் உள்ள குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக சித்ரா பவுர்ணமி சிறப்பு வழிபாட்டில் கலந்து கொள்ள கூடும். அதனால் 4-ந் தேதி மதியத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது. 2 நாட்களும் சேர்த்து 6 ஆயிரம் பேருந்துகள் அனைத்து போக்குவரத்து கழகங்கள் மூலம் இயக்க திட்டமிட்டுள்ளோம்.

மே தினம் 1-ந் தேதியை யொட்டி வருகிற சனிக்கிழமை கோயம்பேட்டில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கூடுதலாக 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். 28-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பயணத்திற்கு 20 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து மட்டும் வெளியூர் செல்ல 8 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.