Tamilசெய்திகள்

சித்ராமையாவுக்கு கொலை மிரட்டல் – விசாரணை நடத்த முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உத்தரவு

கர்நாடகம் மாநிலம் சிவமொக்காவில் சுதந்திர தின விழாவையொட்டி வீர சாவர்க்கரின் படத்துடன் பேனர் வைக்கப்பட்டது குறித்து அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்திருந்தார். முஸ்லிம்கள் வாழும் பகுதியில் வீர சாவர்க்கர் படத்தை வைத்தது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு கர்நாடகா பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடகு மாவட்டத்திற்கு சென்ற சித்தராமையாவை முற்றுகையிட்ட பாஜகவினர், அவரது கார் மீது முட்டைகளை வீசியதுடன் கருப்புகொடி காட்டி போராட்டம் நடத்தினர்.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே சித்தராமையாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. தமது தந்தையின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சித்தராமையாவின் மகன் மகன் யதீந்திரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து முழு விசாரணை நடத்தப்படும் என்று கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். இந்த விவகாரத்தை அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளதாகவும், எதிர்க்கட்சித் தலைவருக்கு போதிய பாதுகாப்பு வழங்குவதுடன், கொலை மிரட்டல் குறித்து விசாரணை நடத்துமாறு கர்நாடகா டிஜிபியிடம் தாம் தெரிவித்துள்ளதாகவும் பொம்மை குறிப்பிட்டுள்ளார்.