சித்தார்த் நடிக்கும் த்ரில்லர் படம் ‘அருவம்’
சாய் சேகர் இயக்கத்தில் சித்தார்த் – கேத்தரின் தெரசா நடிப்பில் உருவாகி வரும் த்ரில்லர் படத்திற்கு `அருவம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தின் தலைப்பு மற்றும் முதல்பார்வை போஸ்டரை, புத்தாண்டை முன்னிட்டு படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
படம் பற்றி இயக்குநர் சாய் சேகர் பேசும்போது, அருவம் என்ற தலைப்பு, இது திகில் படம் என்பதை உறுதி செய்கிறது. அருவம் என்பது உருவம் என்பதின் எதிர் பதமாகும். ஒவ்வொருவரும் நம்ப மறுக்கும், ஆனால் நம்மை சுற்றி நடக்கும் அமானுஷ்ய நிகழ்வுகள் நம்மை நம்பவைக்கும் ஒரு விஷயத்தை பற்றி தான் நாங்கள் பேசுகிறோம். இந்த படத்தை இயக்கியது ஒரு மிகச்சிறந்த உணர்வாகும், என்றார்.
கபிர் துகான் சிங், மதுசூதன ராவ், ஸ்டண்ட் சில்வா மற்றும் போஸ்டர் நந்தகுமார் இந்த படத்தில் வில்லன்களாக நடித்துள்ளனர். சதீஷ், ஆடுகளம் நரேன், குமரவேல், மயில்சாமி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
எஸ்.எஸ்.தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு பணிகளையும், ஜி.துரைராஜ் கலை பணிகளையும் மேற்கொள்கின்றனர். டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ரவீந்திரன் இந்த படத்தை தயாரிக்கிறார். இவர் முன்னதாக சித்தார்த்தின் அவள் படத்தை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.