Tamilசெய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழாவில் தோரோட்டம் இன்று நடைபெற்றது

பூலோக கைலாயமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டு தோறும் ஆனி திருமஞ்சன விழா நடந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஆனி திருமஞ்சன விழா நடை பெறவில்லை.
தற்போது இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன விழா நடத்த கோவில் பொது தீட்சிதர்கள் முடிவு செய்தனர். அதன்படி கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேற்றம் கடந்த 27-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினத்தில் இருந்து தினமும் காலை, மாலை இரு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடந்தது. கடந்த 1-ந்தேதி தெருவடைச்சான் உற்சவமும் நடைபெற்றது.

விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்தது. முன்னதாக அதிகாலை 5 மணியளவில் சித்சபையில் இருந்து சிவகாம சுந்தரி, நடராஜ மூர்த்தி சாமிகள் புறப்பட்டனர். அதன் பின்னர் விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் தனித்தனியே புறப்பட்டன.

5 சாமிகளும் தேர் நிற்கும் இடமான கீழரத வீதிக்கு புறப்பாடு ஆகி வந்தனர். அங்கு தனித்தனித் தேரில் எழுந்தருளினர். 9 மணி அளவில் தேரோட்டம் நடந்தது. கைலாய வாத்தியம் முழங்க பக்தர்கள் பக்தி கோஷத்துடன் தேரினை வடம்பிடித்து இழுத்தனர். தேரோட்ட நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி வந்த தேர் தெற்கு ரதவீதி, மேல ரதவீதி. வடக்கு ரதவீதி வழியாக கீழ ரதவீதிக்கு இன்று மாலை தேர் நிலையை வந்தடையும். அங்கு சிறப்பு தீபாராதனை காட்டப்படும். அதன்பின்னர் நடராஜர், சிவகாமசுந்தரி ஆகிய சாமிகள் ஆயிரம்கால் மண்டபத்தில் எழுந்தருள்வார்கள். அங்கு தீபாராதனைக்கு பிறகு மஹா அபிஷேகம், சொர்ணாபிஷேகம், லட்சார்ச்சணை நடைபெறும். சிகர நிகழ்ச்சியான ஆனி திருமஞ்சன விழா நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது.

இதையொட்டி நாளை அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை ஆயிரம் கால் மண்டபத்தில் நடராஜருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மகா அபிஷேகம் நடைபெறும். அதைத் தொடர்ந்து மதியம் 1 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவும், 2 மணிக்கு ஆனி திருமஞ்சன தரிசனமும் நடைபெற உள்ளது.

தேரோட்டத்தையொட்டி போலீஸ் டி.எஸ்.பி. ரமேஷ்ராஜ் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சிதம்பரம் நகராட்சி சார்பில் பக்தர்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது.