Tamilசெய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து அறநிலையத்துறை இரண்டு நாட்கள் சோதனை

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்த கோவிலின் வரவு-செலவு கணக்குகளை இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி தலைமையிலான குழுவினர் இன்றும், நாளையும் (புதன்கிழமை) ஆய்வு செய்ய உள்ளனர்.

இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தீட்சிதர்களுக்கு நோட்டீசு அனுப்பி இருந்தனர். அறநிலையத்துறையினர் ஆய்வின்போது 2014 முதல் இதுவரையிலான வரவு, செலவு கணக்குகள் மற்றும் தணிக்கை அறிக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கோயிலில் நடைபெற்ற திருப்பணிகள் குறித்தான விவரங்கள், அவற்றுக்கான தொல்லியல்துறை கருத்துரு, இந்து சமய அறநிலையத்துறை அனுமதி விவரம், மதிப்பீடு விவரங்களும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையினர் ஆய்விற்கு சிதம்பரம் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது. முன்னதாக நேற்று சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கனகசபையில் ஏறி நடராஜரை தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவில் பொது தீட்சிதர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீட்சிதர்களின் கோரிக்கைகளின் நிலைப்பாடுகளையும், அரசின் நிலைப்பாடுகளையும் பகிர்ந்து கொண்டோம் என்றார். அனைவருக்கும் சமமான நீதி வழங்க வேண்டும், அனைத்து பிரச்சினைகளுக்கும் முடிவு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது, யாருக்கும் எந்த விதமான பாதிப்பு ஏற்படாமல் சுமுகமான சூழ்நிலை ஏற்படும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.