X

சிக்கிம் முதல்வராக பதவி ஏற்கும் பிரேம் சிங் தாமங்

இமயமலையை ஒட்டிய வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் 2024 மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடந்து முடிந்த நிலையில் அங்கு ஆட்சியில் இருந்த மாநில கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா [SKM] வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர உள்ளது.

மொத்தம் உள்ள 32 சட்டமன்றத் தொகுதிகளில் 31 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் SKM மீண்டும் ஆட்சியமைக்கிறது. மீதமுள்ள ஒரு இடத்தில் மற்றோரு மாநிலக் கட்சியான SDF வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் சிக்கிம் மாநில முதல்வராக SKM கட்சித் தலைவர் பிரேம் சிங் தாமங் 2 வது முறையாக மீண்டும் சிக்கிம் முதல்வராக இன்று மாலை பதவி ஏற்க உள்ளார்.

இன்று மாலை 4 மணி அளவில் தொடங்கும் நிகழ்ச்சியில் பிரேம் சிங்கிற்கும் புதிய அமைச்சர்களுக்கும் சிக்கிம் ஆளுநர் லக்ஷ்மணன் ஆச்சார்யா பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். சிக்கிம் தலைநகர் கேங்டாக்கில் உள்ள பால்ஜோர் ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறும் இந்த நிகழ்வில் சுமார் 30,000 பேர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிக்கிமில் 1 மக்களவைத் தொகுதி மட்டுமே உள்ள நிலையில் அதிலும் SKM கட்சி வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.