X

சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பு ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கிடைக்கும் – சுரேஷ் ரெய்னா நம்பிக்கை

ஐபிஎல் 2023 தொடர் மார்ச் 31-ம் தேதி அகமதாபாத்தில் பிரம்மாண்டமாக தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. இதனையொட்டி டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாள்தோறும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், 41 வயதாகும் டோனி இந்த ஐபிஎல் தொடருடன் பெரும்பாலும் ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் இந்த ஆண்டு சிஎஸ்கே விளையாடப்போகும் கடைசி போட்டிக்கு முன்பாக இந்த அறிவிப்பை டோனி வெளியிட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

அதேநேரத்தில் அவருக்கு அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு யார் கேப்டன் பொறுப்பை ஏற்பார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா இளம் வீரரின் பெயரை பரிந்துரை செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

டோனிக்குப் பிறகு சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட் ஏற்பார் என நம்புகிறேன். அவர் சிஎஸ்கே மற்றும் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி இருக்கிறார். இளம் வீரர் என்பதால் அவருக்கு சிஎஸ்கே கேப்டன் பொறுப்பை கொடுக்கலாம்.
ருதுராஜ் உங்களின் சிஎஸ்கே கேப்டன் பொறுப்புக்கு என்னுயை வாழ்த்துகள். என தெரிவித்துள்ளார்.

ருதுராஜ் கெய்க்வாட் 2020-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அறிமுகமானார். தொடக்க ஆட்டக்காரராக இருக்கும் அவர் 2021-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை விளாசி ஆரஞ்சு தொப்பியை பெற்றிருந்தார். அந்த சீசனில் ஒரு சதம் மற்றும் 4 அரைசதங்களை சிஎஸ்கே அணிக்காக விளாசினார்.