சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் படைத்த சாதனை
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 39-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் (108) சதம் அடித்து அசத்தினார். அதனை தொடர்ந்து விளையாடிய லக்னோ அணி 19.3 ஓவரில் வெற்றி பெற்று அசத்தியது. அதிகபட்சமாக ஸ்டோய்னிஸ் 63 பந்துகளில் 124 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் இதுவரை சிஎஸ்கே அணி தோல்வியை சந்தித்ததில்லை. இதன் மூலம் சேப்பாக்கத்தில் முதல் தோல்வியை சந்தித்துள்ளது.
சென்னை அணி தோல்வியை சந்தித்தாலும் கேப்டன் ருதுராஜ் சிஎஸ்கே அணிக்காக மிரட்டலான சாதனை ஒன்றை படைத்துள்ளார். சிஎஸ்கே அணியின் கேப்டனாக டோனி படைக்காத சாதனையை ருதுராஜ் படைத்துள்ளார். சிஎஸ்கே அணியின் கேப்டனாக முதல் சதத்தை அவர் படைத்து அசத்தியுள்ளார்.
சிஎஸ்கே அணியின் கேப்டனாக 2019-ம் ஆண்டில் டோனி 84 ரன்கள் குவித்ததே அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.