சென்னையில் சாலை விபத்துகள் அதிகளவில் ஏற்பட்டு வருகிறது. சென்னை மட்டுமின்றி உலகம் முழுக்க விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகம். விபத்துகளை கட்டுப்படுத்த என்ன செய்வது என்று சிந்தித்து சென்னை மாநகரப் போக்குவரத்து துறை ‘Zero is Good’ என்ற முயற்சியை கையில் எடுத்துள்ளது.
இந்த முயற்சியின் மூலம் விபத்துகளை முற்றிலுமாகத் தடுக்க முடியுமா என்றால், நிச்சயமாக பதில் தெரியவில்லை. இருப்பினும் முயற்சிக்கு முழு பங்களிப்பை அளிக்க போக்குவரத்து துறை முடிவெடுத்து, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
தலைக்கவசம் உயிர்க் கவசம் என்று தெரிந்தும், எத்தனைப் பேர் தலைக்கவசமின்றி வாகனம் ஓட்டுகிறார்கள்? செல்போன் பேசிக் கொண்டு எத்தனைப் பேர் விபத்துகளை ஏற்படுத்துகிறார்கள்? போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் எத்தனைப் பேர் விபத்தில் பலியாகின்றனர்? அனைத்து விதிமுறைகளையும் நாம் பின்பற்றினால் நிச்சயமாக நம்மால் விபத்துகளைத் தடுக்க முடியும்.
ஆகஸ்ட் 26-ம் தேதியை சென்னைக்கு விபத்தில்லாத நாளாக கொடுக்க போக்குவரத்து துறை முடிவெடுத்துள்ளது.
இந்நிலையில் ‘Zero is Good’ பிரச்சாரத்திற்க்கு ஐபிஎல் அணிகளில் ஒன்றான, அதுவும் சென்னையை அங்கமாக கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இது தொடர்பான விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளது.
அதில் கேப்டன் ருதுராஜ், ரகானே, பிராவோ, துபே, ரச்சின் ரவீந்திரா, துஷார் பாண்டே ஆகியோர் விழிப்புணர்வு குறித்து பேசியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.