சாலையில் அமைச்சரவை கூட்டத்தை நடத்திய மம்தா பானர்ஜி!
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்துவதற்கு வந்த சிபிஐ அதிகாரிகளை போலீசார் சிறைப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது. போலீஸ் கமிஷனர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து தடைகளை ஏற்படுத்துவதாகவும், அவரை விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி உத்தரவிட வேண்டும் எனவும் சிபிஐ கூறியுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.
இதற்கிடையே, கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த சிபிஐ வந்ததற்கு எதிராக மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, 3-ம் தேதி முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 8-ம் தேதி வரை போராட்டத்தை தொடரப்போவதாக அறிவித்துள்ளார்.
கொல்கத்தா மெட்ரோ சேனல் அருகே சாலையில் அமர்ந்து தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மம்தா பானர்ஜிக்கு, எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த போராட்டத்திற்கு மத்தியிலும் அரசுப் பணிகளை மம்தா பானர்ஜி கவனித்து வருகிறார். தர்ணா போராட்ட பந்தல் அருகே உள்ள புறக்காவல் நிலையம், மாநாட்டு அறையாக மாற்றப்பட்டுள்ளது. நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக, இந்த அரங்கில் மம்தா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. சுமார் 20 நிமிடம் நடைபெற்ற இந்த கூட்டம் நிறைவடைந்ததும், தர்ணா பந்தலுக்கு வந்து போராட்டத்தை தொடர்ந்தார் மம்தா. மேற்கு வங்க வரலாற்றில் முதல் முறையாக சாலையோரம் அமைச்சரவை கூட்டம் நடந்துள்ளது.
போராட்டத்தின் இடையே போலீசாருக்கு வீரதீர செயல்களுக்கான விருதுகளை மம்தா வழங்கினார். தலைமைச் செயலாளர் கொண்டு வந்திருந்த பல்வேறு அரசுத்துறை சம்பந்தப்பட்ட கோப்புகளிலும் கையெழுத்திட்டார்.
விவசாயிகள் பொதுக்கூட்டத்தில் வீடியோ கால் மூலம் உரையாற்றினார். இந்த பொதுக்கூட்டம், மம்தாவின் தர்ணா நடைபெறும் இடத்தில் இருந்து சில கி.மீ தொலைவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.